பக்கம்:மதன கல்யாணி-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45

அகாலத்தில் குழந்தை பிறக்காதென்ற நம்பிக்கையினால் சிறிதும் அஞ்சாதிருந்தான். ஆறுமாத காலத்திற்குப் பிறகு, புதிய ஜெமீந் தாரிணி கருப்பிணியாகி இருக்கிறாள் என்ற செய்தி பரவியது. அப்போதும் சின்ன துரை அதை இலட்சியம் செய்யவில்லை. மேலும் நான்கு மாதங்களில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது என்ற சமாசாரம் பரவியது. பெரிய ஜெமீந்தார் குடிகள் முதலிய சகல ஜனங்களும் அதைக் குறித்துக் கரைகடந்த மகிழ்ச்சி அடைந்து அதை ஒரு திருவிழாப் போல கொண்டாடினார்கள். அந்த விஷயம் சின்ன துரைக்கும் எட்டவே அவன் அப்போதே சிறிது கவலைக் கொள்ளத் தொடங்கினான். அவனது மனதில் பலவகையான சந்தேகங்கள் தோன்றி வதைத்தன. அது உண்மையாகவே ஜெமீந்தாரது குழந்தையாய் இருக்குமோ அல்லது மோசக் கருத்தான காரியமாய் இருக்குமோ என்று நினைத்தான். ஆனால் அது மாந்தம் முதலிய இளம்பிராய நோய்களுக்கெல்லாம் தப்பிப் பிழைக்காதென்று அவனது மனதில் ஒரு நினைவுண்டாயிற்று; அதனால் அவன் அதைப்பற்றி எவ்வித முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தான். அதன் பிறகு ஒன்றரை வருஷத்துக்கொரு முறை ஒவ்வொரு குழந்தையாக வேறு இரண்டு பெண் குழந்தைகள் கிழவருக்குப் பிறந்தன. அந்தச் செய்தியும் சின்ன துரைக்கு எட்டியது. முதலில் பிறந்த ஆண் குழந்தையும் மூன்று வயதடைந்து மிகுந்த அழகும், புத்திக் கூர்மையும், தேக ஆரோக்கியமும் உடையதாய் இருப்பதாகவும் கேள்வியுற்ற சிறிய ஜெமீந்தாருக்கு உண்மையில் அப்போதே பெருத்த அச்சமும் கவலையும் உண்டாயின. துஷ்டர்களான தனது நண்பர்களிடம் அவன் தனது நிலைமையை விரித்துக் கூறி அவர்களோடு மந்திராலோசனை செய்து பெரிய ஜெமீந்தாரது ஆண் குழந்தையைக் கொன்று விடுவதே தகுதியான காரியம் என்று உறுதி செய்து கொண்டான். எப்படி அந்தக் கொடிய செயலை நிறைவேற்றுவது என்று அவர்கள் உடனே யோசித்தனர்; திருட்டு, கொலை முதலிய வற்றில் பெயர் பெற்று அஞ்சா நெஞ்சு படைத்த ஒரு குறவன் ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பதாகக் கேள்வியுற்று தக்க ஆளை அனுப்பி, தந்திரமாக அவனைத் தருவித்து அவனுக்குத் தேவையான பொருள் கொடுத்து, அவன் மாரமங்கலம் போய் அரண்மனைக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/63&oldid=649960" இலிருந்து மீள்விக்கப்பட்டது