பக்கம்:மதன கல்யாணி-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மதன கல்யாணி

இருந்து கணக்குகள் எழுதுவதற்காக விடப்பட்டிருந்த அந்த அறையின் வாசலில் நின்றவன் குமாஸ்தாக்களுள் ஒருவன். அவனது வயது பதினெட்டுக்கு மேல் இராது. அவன் மன்மதனைப் போன்ற அற்புத்மான அழகும் பளபளப்பான சிவந்த மேனியும் பெற்றவன். அடர்ந்து கருத்து வளைந்திருந்த புருவ விற்களும், உருண்டைக் கன்னங்களும், மூக்கும் விழியும், கரணைகரணையாய் அமைந்த கைகளும் கால்களும் மிக்க வசீகரமாய் அமைந்து, அவன் ஒரு யெளவனப் பெண் போல இருந்தான். அவனது உடம்பில் ஒரு சேலையை மாத்திரம் அணிந்து விட்டால் அவன் உலகம் எல்லாம் மோகிக்கும்படி செய்யத்தக்க அற்புத வடிவழகியான மோகினி போலவே காணப்படுவான். அவனது குளிர்ந்த பார்வையும், மிருதுவான சொல்லும், அழகான நடையும், பதற்றமில்லாத செயல்களும், கபடமற்ற மனதும் தத்ரூபம் பெண்ணின் தன்மையைப் போலவே இருந்தன. சிருஷ்டி கருத்தாவான பிரம்மதேவன் அயர்ந்திருந்த தருணத்தில், பெண்ணாய் அமைந்த ஒரு வடிவத்திற்கு ஆண் என்று பெயர் மாத்திரம் கொடுத்து அனுப்பி விட்டானோ என்று சந்தேகிக்கத்தக்க அமைப்பாக இருந்த மோகனரங்கன் என்னும் பெயர் கொண்ட அந்த யெளவனச் சிறுவன் வெளியில் நின்றதைக் கண்டவுடனே கோமளவல்லி தலையைக் கீழே குனிய வைத்துக் கொண்டு விரைவாக நடந்து தனது அந்தப்புரத்திற்குள் போய் விட்டாள். துரைஸானியோ அவனைக் கண்டவுடனே தனது தங்கை உள்ளே போய்விட்டாள் என்அதை ஆராய்ந்து பார்த்து விட்டு, அந்த அழகனை நோக்கி, தனது சுந்தரவதனத்தை மலர்த்திப் புன்னகை செய்து, தனது முழு ஆசையையும் கண்களில் புகுத்திக் காட்டி அவனை நன்றாகப் பார்த்து நெடுமூச்செறிந்தாள். அவளது மார்பு உயர்ந்து தணிந்தது. அந்த நிலைமையில் அவள் அசைந்தாடி அழகு நடை நடந்து அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள். தன்மீது அம்புபோலப் பாய்ந்த அவளது பார்வையைக் கண்டு அச்சமும் நடுக்கமும் கொண்ட மோகனரங்கன் தனது முகத்தைக் கீழே தாழ்த்திக் கொண்டான். அடுத்த நிமிஷத்தில், வீணை வித்துவானான மதனகோபாலன் அங்கே தோன்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/84&oldid=650007" இலிருந்து மீள்விக்கப்பட்டது