பக்கம்:மதன கல்யாணி-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மதன கல்யாணி

கொள்ளும். உமக்கு இது தான் வழி; இந்தப் பாலத்தின் வழியாகப் போனால் நீர் உம்முடைய பங்களாவுக்குப் போய்ச் சேரலாம். இந்தச் சங்கதியை நீர் எவரிடத்திலும் வெளிடமாட்டீர் என்று நம்புகிறேன்; வெளியிடுவீரானால், ஒரு பெண்பிள்ளைக்கு பயந்து எல்லாவற்றையும் கொடுத்து ஏமாறிப் போனதைப்பற்றி எல்லோரும் ஏளனமாகப் பேசி காறி எச்சிலை உம்முடைய முகத்தில் உமிழ் வார்கள். நீர் சொத்தையும் இழந்து அவமானமும் ஏன் அடைய வேண்டும். இந்தப் பொருள், உம்முடைய ஐவேஜிக்கு ஒரு பெரிதல்ல. ஐயா! மைனரே! நமஸ்காரம், போய்வாரும்; நீர் செய்த நன்றியை ஒரு நாளும் மறக்கமாட்டேன்’ என்று அவரைப் புரளி செய்த வண்ணம், அந்தத் திருமங்கை ஆழ்வார் தனது குதிரையை முடுக்கிவிட்டுக் கொண்டு இரண்டொரு நிமிஷத்தில் மறைந்து போய்விட்டாள்.

மைனரோ பேச்சுமூச்சின்றி அசையாமல் திகைப்பே வடிவாய்க் கல் போல அந்த இடத்திலேயே கால் நாழிகை நேரம் வரையில் நின்றான். அவனது உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டது. அவன் தனது பஞ்சேந்திரியங்களையும் நம்பாமல் அங்கு நிகழ்ந்த சம்பவம் மெய்யானதோ பொய்யானதோ என்று பெரிதும் திகைத்து வெட்கத்தினால் முற்றிலும் குன்றிப்போய் நின்றான். பயனில்லாத பெருத்த கோபமும், அவமானமும், துக்கமும், அழுகையும் எழுந்து அவனை வளைத்துக் கொண்டன. அன்றிரவு, முதலில் அம்பட்டக் கருப்பாயி வீட்டிலும், பிறகு பாதையிலும், இரண்டு பெண்பிள்ளைகளிடத்தில் தான் ஏமாறிப் போனதை நினைக்க நினைக்க, தனது கேவலமான நிலைமையைக் குறித்து அவன் தன்னைத் தானே துஷித்துக் கொண்டான். அன்றிரவு நடந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் தனக்கு அதனால் பெருத்த அவமானமும் இழிவும் ஏற்படும் என்று நினைத்து, அவன் அந்த விஷயங்களை, அந்த வேஷதாரி சொன்னபடி, வெளியிடாது இருப்பதே நல்லதென்று நினைத்துக் கொண்டான். அப்போது இரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும் என உணர்ந்த மைனர், அந்த நடுஇரவில் அவ்விடத்திலேயே நிற்கவும் அஞ்சி, வழியோடு நடந்து செல்லவும் பயந்து, விவரிக்க இயலா விதம் தவித்தான்; அச்சப்பட்டுக் கொண்டே அவ்விடத்தில் இருப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/98&oldid=650034" இலிருந்து மீள்விக்கப்பட்டது