பக்கம்:மதன கல்யாணி-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 மதன கல்யாணி

வரையில் தாமதமாகக்கூடிய ஒர் அலுவலின் மேல் தன்னை எங்கேயாகிலும் அனுப்பிவிடுவாரோ என்ற கவலையும், தான் துரைஸானியம்மாளை விட்டுப் பிரியும்படி நேருமோ என்ற அச்சமும் ஏக்கமும் எழுந்து அவனைப் பலவாறு உலப்பத் தொடங்கின. மறுநாளைக்குள், தானும் துரைஸ்ானியம்மாளும் தனியான ஜாகைக்குப் போக வேண்டும் எனச் செய்துள்ள தீர்மானம் பலியாமற் போய்விடுமோ என்ற பெருத்த கவலையும் தோன்றி அவனை சஞ்சலப்படுத்தியது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்றும், தன்னை எந்த இடத்திற்கு அனுப்பப் போகிறாரோ என்றும் அவன் நினைத்து வருந்தி நின்ற தருணத்தில், வேலாயுதம் தனது மகனான சுமார் பதினைந்து வயதுள்ள ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். அதற்குள் சிவஞான முதலியாரும் கடிதங்களை எழுதி முடித்து விட்டமையால், அவர் ஒரு கடிதத்தை எடுத்து வேலாயுதத்தின் மகனை நோக்கி, “அடே குப்பா இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு, உடனே தேனாம்பேட்டைக்குப் போய் மாரமங்கலத்து பங்களாவில் எஜமானியம்மாளிடத்தில் நேரிலேயே இதைக் கொடுத்துவிட்டு வா; வேறு எவரிடத்திலும் கொடுக்க வேண்டாம்; தெரிகிறதா?” என்றார். அதைக் கேட்ட குப்பன் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு, கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வெளியில் போய்விட்டான். உடனே சிவஞான முதலியார் வேலைக்காரனைப் பார்த்து, “அடே வேலாயுதம்! இப்போது உடனே எழும்பூருக்குப் போக வேண்டும். பெட்டி வண்டி வாசலில் தயாராக நிற்கட்டும்” என்றார். வேலாயுதம் உடனே கீழே போய்விட்டான்.

அப்போது சிவஞான முதலியார் தமக்கெதிரில் ஸ்தம்பித்து நின்ற வடிவழகனை நோக்கி, “அப்பா மோகனரங்கம்! செங்கல்பட்டில் என்னுடைய தம்பி சோணாசல முதலியார் வக்கீலாக இருக்கிறது உனக்குத் தெரிந்த சங்கதி, செங்கல்பட்டிலுள்ள எங்களுடைய ஜெமீன் கிராமங்களையும் அவரே பார்த்து வருகிறார் என்பதும் உனக்குத் தெரியும். இப்போது நிலங்களின் மாசூல் அறுவடை காலம். அந்த அறுவடை முதலிய காரியங்களைச் செய்ய, நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/134&oldid=645876" இலிருந்து மீள்விக்கப்பட்டது