பக்கம்:மதன கல்யாணி-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159

வரவேண்டாம் என்று நான் சொன்னதாகச் சொல்லி, அவளுக்கு என்ன ஆகாரம் வேண்டுமோ, அதை அறிந்து கொண்டு சமையல் காரியிடத்துக்குப் போய் அந்த ஆகாரத்தை வாங்கிக் கொண்டு வந்து, குழந்தை இருக்கும் இடத்திலேயே போட்டு சாப்பாடு செய்து வைத்துவிட்டு, பேசாமல் படுத்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு, வெளிக் கதவை முன் போல முடிப் பூட்டிக்கொண்டு இங்கே வா: அவள் வெளியில் வரவேண்டும் என்றால் என்னுடைய உத்தரவை கேட்டுக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் பூட்டிக்கொண்டு வந்து சேர் தெரிகிறதா?” என்று கூறினாள்.

சின்னம்மாள் என்ற அந்த வேலைக்காரி, “உத்தரவுப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, திறவுகோலை எடுத்துக் கொண்டு, வெளியில் போய், பங்களாவின் வாசலிலிருந்த தபாற் பெட்டியில் கலியாணக்கடிதத்தைப் போட்டுவிட்டுத் திரும்பி உள்ளே வந்து, துரைஸானியம்மாள் அடைபட்டிருந்த அந்தப் புரத்து வாசலையடைந்து, பூட்டைத் திறந்து விலக்கிவிட்டு, கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். உட்புறம் முழுதும் இருள் சூழ்ந்து கிடந்தது. உடனே சின்னம்மாள் சுவரில் உள்ள விசையைப் பிடித்து அழுத்தி, மின்சார விளக்குகளில் ஒன்றை ஏற்றவே, அந்த இடம் முழுதும் பளிச்சென்ற பிரகாசம் நிறைந்தது. துரைஸானியம்மாள் நோய் கொண்டவள் போலத் துவண்டு ஏக்கமுற்றுக் கட்டிலின் மீது படுத்திருந்தாள். தான் எதிர்பாராவிதத்தில் கதவு திறக்கப்பட்டதையும் விளக்கு ஏற்றப் பட்டதையும் கண்டு வியப்புற்று, அப்படிச் செய்தது தனது தாயோ அல்லது வேலைக்காரியோ என்று அறிந்து கொள்ளும் பொருட்டு, தனது அழகிய சிரத்தை மெதுவாக நிமிர்த்திப் பார்த்து, வேலைக்காரியான சின்னம்மாள் வந்திருந்ததை உணர்ந்து அவள் எவ்விதமான செய்தி கொணர்ந்திருப்பாளோ என்று அறிய ஆவல் கொண்டவளாய், துரைஸானியம்மாள் தனது சயனத்தில் சிறிதளவு நிமிர்ந்து திண்டில் சாய்ந்து கொண்டாள். தனது தாய் தன்னை உள்ளே வைத்துப் பூட்டியதிலிருந்து, சிப்பந்திகள் தனது ரகசியத்தை உணர்ந்து கொண்டிருப்பார்களோ என்றும், அப்படி உணர்ந்து கொண்டிருந்தால், அவர்கள் தன்னைப்பற்றிப் புரளி செய்வார்களே என்றும் ஒருவகையான அச்சமும் வெட்கமும்

un.6.II–11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/163&oldid=645922" இலிருந்து மீள்விக்கப்பட்டது