பக்கம்:மதன கல்யாணி-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253

காட்டியதைக் கண்டு, அவள் பெருத்த வியப்படைந்து, தான் அவ்வளவு நீண்டகாலம் தூங்கியதுண்டா என்ற சந்தேகங் கொண்டு, ஒருகால் கடிகாரத்தின் கைகள் நின்றுபோய் இருக்குமோ என்று ஐயமுற்றவளாய், எழுந்து கடிகாரத்தண்டை போய்ப் பார்க்க, அது ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது; அவள் உடனே கதவுகளைத் திறந்து வெளிப்பக்கத்தை நோக்க, ஆங்காங்கு விளக்குகள் கொளுத்தப்பட்டிருந்தன அவளது பணிப்பெண் உடனே உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்ட கல்யாணியம்மாள், அடி இப்போது மணி எவ்வளவு? நான் சுமார் 10-மணிக்குப் படுத்தேனே! இவ்வளவு நேரம் வரையிலா துங்கினேன்! என்னை எழுப்பக் கூடாதா?’ என்றாள்.

அதைக் கேட்ட பணிமகள், “எஜமானே! இப்போது சாயுங்கால வேளை ஆகிவிட்டது. தாங்கள் கதவுகளை எல்லாம் மூடிக் கொண்டு படுத்திருந்தீர்கள். உடம்பு அசெளக்கியமாக இருக்கிற தாகையால் தொந்தரவு செய்யக்கூடாதென்று நினைத்து நான் நெடு நேரம் பொறுத்திருந்தேன்; தாங்கள் ஸ்நானமும் செய்யவில்லை போஜனமும் செய்யவில்லை. நேரம் ஆக ஆக, எங்களுக்கு நிரம்பவும் கவலையாக இருந்தது; கதவையும் தட்டிப் பார்த்தேன். இன்னம் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, கதவை பலவந்தமாகத் திறந்து கொண்டாவது வந்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருந்தேன்; நல்ல வேளையாகத் தாங்களே எழுந்தீர்கள்” என்று மிகுந்த கவலையோடும் அபிமானத்தோடும் பேசினாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மகிழ்ச்சியும் புன்னகையும் கொண்டவளாய், “எனக்கு உடம்பு நிரம்பவும் அசெளக்கியமாக இருந்ததாகையால், மெத்தையின் மேல் படுத்தேன் மெய்ம்மறந்து அவ்வளவு நேரம் தூங்கிவிட்டேன்; நான் தூங்கிக் கொண்டிருந்த போது வேறே ஏதாவது விசேஷம் நடந்ததோ?” என்றாள்.

பணிமகள், “விசேஷம் ஒன்றும் நடக்கவில்லை” என்றாள். கல்யாணியம்மாள், “மூத்த குழந்தையின் உடம்பு எப்படி இருக்கிறதென்பது உனக்குத் தெரியுமா?” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/257&oldid=646105" இலிருந்து மீள்விக்கப்பட்டது