பக்கம்:மதன கல்யாணி-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267

ஆயிடப் போவுதேயின்னு நீங்க பயப்பட வேண்டியதே இல்லை” என்றாள்.

கல்யாணியம்மாள் மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்த வளாய் பொன்னம்மாளை நோக்கி, “என்ன காலத்துக்குத்தான் நமக்கு இப்படிப்பட்ட சங்கடமெல்லாம் வருகிறதோ தெரிய வில்லையே! ஒரு நிமிஷ நேரமாவது கவலையில்லாமல் தலையை சாய்த்துப் படுக்க முடியாமல் போய்விட்டதே! எந்தக் பக்கம் திரும்பினாலும் எதில் கையை வைத்தாலும், புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்புவது போல, என்னென்னவோ எதிர்பாராத விநோதம் எல்லாம் வந்து முளைக்கிறதே! நேற்று அந்தப் பத்திரத்தை எடுத்து வரப் பார்த்தோம். அதை மைனர் ரிஜிஸ்டர் செய்து, முன்னிலும் அதிக இடைஞ்சலான நிலைமையை உண்டாக்கி வைத்து விட்டான். அந்தக் கடையன் குறவன் நமக்கு இன்னமும் அனுகூலம் செய்து வைப்பதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அதிலிருந்து என்ன புதிய விபரீதம் கிளம்பப் போகிறதோ தெரியவில்லை. இந்த மோகனரங்கனை வெளி யூருக்கு அனுப்பி விட்டால் துரைஸானியம்மாளைப் பற்றிய கவலை நீங்கிப் போய் விடும் என்று நினைத்தால், அதுபோக, இந்தப் பெருத்த இடிவந்து பயமுறுத்துகிறது. இது எப்படித்தான் முடியுமோ தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் நீ ஒரு காரியம் செய்; உடனே புறப்பட்டு நேரில் நீயே மைலாப்பூருக்குப் போய், வக்கீல் ஐயாவைக் கண்டு, எப்படிப்பட்ட அவசரமான ஜோலி இருந்தாலும், அதை நிறுத்தி விட்டு, உடனே இங்கே வந்துவிட்டுப் போகும்படி சொல்லி அழைத்துக் கொண்டு வந்து சேர், இந்த விஷயம் நிரம்பவும் விபரீத மாக இருக்கிறதாகையால், நாம் அலட்சியமாக நினைத்து சும்மா இருப்பது பிசகு, அவர் எப்படி நடந்து கொள்ளச் சொல்லுகிறாரோ அப்படியே நடந்து கொள்ளும்” என்று முடிவாகக் கூறினாள்.

அதைக் கேட்ட பொன்னம்மாள் அதற்கு மேல் எவ்வித சமாதானமும் சொல்லாமல், “சரி, அப்படியே செய்யறேனுங்க. இதோ சண நேரத்துலே அவரெ இட்டாறேன்” என்று கூறிக் கொண்டே வெளியில் போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/271&oldid=646133" இலிருந்து மீள்விக்கப்பட்டது