பக்கம்:மதன கல்யாணி-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273

ஒரு விஷயத்தை நிச்சயமாகச் சொல்லலாம். புத்திசாலித்தனத்தினா லும், தந்திர யுக்திகளிலும், வித்தையிலும், உலக அனுபோகத்திலும் தாய் தகப்பனைவிடப் பிள்ளைகள் மேலானவர்களாக இருப்ப தில்லையா? அப்படி இருக்க, எந்த விஷயத்திலும் தாய் தகப்பன் மார்கள் செய்வதெல்லாம் நன்மையானதென்பதும், பிள்ளைகள் செய்வதெல்லாம் தீமையான தென்பதும் பின்னவர்கள் முன்னவர் களை தெய்வம் என்று மதித்து அவர்கள் சொற்படியே நடக்க வேண்டும் என்பதும் நியாயமாகுமா? தாய் தகப்பன்மார்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நாம் அவர்களை வணங்கி அவர்கள் சொல்லுகிறபடி எல்லாம் குருட்டுத்தனமாகச் செய்தே தீரவேண்டும் என்பது உன்னுடைய கொள்கை என்னுடையது அதுவல்ல. தாய் தகப்பன்மார்கள் நல்ல விவேகிகளாகவும், கண்ணியமான நடத்தை உள்ளவர்களாகவும் இருந்தால் மாத்திரம் நாம் அவர்களைப் பணிந்து அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டுமன்றி, அவர்கள் அருகமற்றவர்களாக இருந்தால், நாம் கூடியமட்டில் அவர்களைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டுவர முயல்வதே நம்முடைய கடமையன்றி, குருட்டு பக்தியினால் அவர்களைப் பார்த்து நாமும் கெட்டுப் போகக் கூடாதென்பதே என்னுடைய கொள்கை.

கோமளவல்லி:- (நிரம்பவும் கிலேசமும் சங்கடமும் அடைந்தவ ளாய்) அக்கா! நீ சொல்வது பொதுவான நியாயமாக இருந்தாலும் நம்முடைய அம்மாள் விஷயத்தில் நீ இப்படிப்பட்ட தகாத வார்த்தையை வாயில் வைத்துப் பேசுவதும் அடாத விஷயம். நீ இப்படிப் பேசுவதைக் காதால் கேட்கவே எனக்குச் சகிக்கவில்லை. அபாரமான புத்தி விசேஷமும், மாசற்ற நடத்தையுமுள்ள நம்முடைய தாயைக் கேவலம் முட்டாளாகவும் இழிகுணம் உடையவளாகவும் மதித்துப் பேசுவது மகா பாவம். இனிமேல் இந்த மாதிரி பேச வேண்டாம். - -

துரைஸானி:- அம்மாளை நான் முட்டாள் என்று சொல்ல வில்லை. அவர்கள் சரியான நடத்தையுள்ளவர்கள் அல்ல என்பது தான் என்னுடைய எண்ணம். அன்றைய தினம் அம்மாள் அந்த மதனகோபாலன் மேல் மோகங் கொண்டு அவனைத் துரத்திக் கொண்டு ஓடியதை நாம் கண்ணால் பார்த்தோம் அல்லவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/277&oldid=646144" இலிருந்து மீள்விக்கப்பட்டது