பக்கம்:மதன கல்யாணி-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279

நினைத்த நினைப்பை எல்லாம் நீ சிதற அடித்துவிட்டாய். போனது போகட்டும். ஏதோ தவறு செய்து விட்டாய்; இனிமேலாவது அதை நீ தவறென்று உணர்ந்து அம்மாள் சொல்லுகிறபடி நடந்துகொள்; அந்தப் பையனிடத்தில் நீ கொண்ட துர்மோகத் தினால் வீணாக மதியை இழந்து எதற்கும் துணிந்த காரியத்தைச் செய்ய நினைக்காதே.

துரைஸானி:- நான் இனிமேல் இந்த விஷயத்தில் செய்வதற்கு என்ன இருக்கிறது? நான் ஆசைப்பட்டாலும், ஆசைப்படா விட்டாலும் இன்றைய தினம் அவர்கள் என்னை பலவந்தமாகக் கொண்டு போய் அந்த மோகனரங்கனுக்குக் கலியாணம் செய்து வைக்கப் போகிறார்களாம்; இவர்கள் எவ்வளவு பக்கபலத்தோடு இருந்தாலும், அவர்களுடைய காரியத்தைத் தடுக்க இவர்களால் முடியாதாம்; ராத்திரி சரியாக ஒன்பது மணிக்குக் கலியாணம் நடக்கப் போகிறதாம். இந்த விவரங்கள்தான் எனக்குக் கிடைத்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன; இதை மோகனரங்கன் குப்பம்மாளிடத்தில் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.

கோமளவல்லி:- (வியப்பும் திகைப்பும் அடைந்து) என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட பெருத்த பட்டணத்தில் இப்படியும் நடக்குமா! பட்டிக்காடுகளில் கொள்ளைக்காரர்கள் முன்னால் அறிவித்து விட்டுத் தீப்பந்தங்களோடு வந்து திருடுவதுண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அது போல இருக்கிறதே! நாம் இனி சும்மா இருப்பது பிசகு, உடனே அம்மாளிடத்தில் போய் இந்த விஷயத்தைத் தெரிவித்தால், அவர்கள் இதற்குத் தக்க போலீஸ்காரர்களையும் ஆள்களையும் வைத்துக் கொண்டு எச்சரிப்பாக இருப்பார்கள். நான் அம்மாளிடத்தில் போய் இதைச் சொல்லட்டுமா?

துரைஸானி:- நீ சொல்லுகிற வரையில் இது அம்மாளுக்குத் தெரியாமல் இருக்கிறதா? அவர்களுக்கும் இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார்களாம். நேருக்கு நேர் விஷயத்தைச் சொல்லிவிட்டே பகிரங்கமாக இதை அவர்கள் நடத்தப் போகிறார் களாம். அதுதான் சூரத்தனம். அப்படிப்பட்ட வீராதி வீரனான புருஷனைக் கட்டிக் கொள்வதும் ஒரு பெருமையல்லவா! -

என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/283&oldid=646156" இலிருந்து மீள்விக்கப்பட்டது