பக்கம்:மதன கல்யாணி-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309

விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் நிரம்பவும் அலட்சியமாக மதித்திருந்தேன்; இது பெருத்த விபரீதமாக இருக்கிறது. இங்கே வந்த பெண்பிள்ளையின் துடுக்கையும் துணிவையும் மன உரத்தையும் பார்த்தீர்கள் அல்லவா? அவளுக்கு அவ்வளவு அதிகமான பக்கபலம் இருப்பதனாலே தான் அவள் அவ்வளவு இறுமாப்பாகவும் எடுப்பாகவும். பேசினாள் அவளை அழைத்துப் ப்ோய் ஸ்டேஷனில் வைத்துக் கொண்டு, நயமாக எவ்வளவோ கேட்டோம்; அவள் வாயைத் திறக்கவே இல்லை; பிறகு எங்களுடைய மருந்தை நன்றாக உபயோகப்படுத்தினோம். உடனே அவள் கலங்கிப் போய் வழிக்கு வந்து நிஜத்தை எல்லாம் கக்கிவிட்டாள் உண்மை என்ன வென்றால், அவள் அடையாற்றில் வாத்திச்சியாக இருந்தாள் அல்லவா, அதற்குப் பக்கத்தில் திருவாமூர் என்று ஒர் ஊரிருக்கிறது. அங்கே ஒரு பெருத்த ஜெமீந்தார் இருக்கிறார். அவர் பெருத்த டம்பாச்சாரி அவர் இவளை வைப்பாட்டியாக வைத்துக் கொண் டிருக்கிறாராம். அவர் இப்போது சரியாக எட்டு மணிக்கு 200 ஆள்களோடு வந்து இந்த பங்களவை வளைத்துக் கொள்ளப் போகிறாராம்; அத்தனை ஆள்களிடத்திலும் கத்திகளும் துப்பாக்கி களும் இருக்கின்றனவாம்; அவர்கள் எப்படியும் இன்றைய தினம் பெண்ணைக் கொண்டு போய்விடப் போகிறார்களாம். ஒன்பது மணிக்கு முகூர்த்தத்தை நடத்த புரோகிதர் மேளக்காரர்கள் ஆகிய சகலமானவர்களும் ஆயத்தமாக இருக்கிறார்களாம். ஆகையால் இனி ஒரு நிமிஷங்கூட நாம் அஜாக்கிரதையாக இருந்தால், பெண் போய் விடும். இந்த விவரங்களை எல்லாம் கேட்டேன். உடனே அவளைச் சிறைச்சாலையிலேயே அடைத்து வைத்துவிட்டு, இங்கே பறந்து வந்திருக்கிறேன். பெட்டி வண்டியில் வந்தால் கால தாமசமாகும் என்று நினைத்து, அங்கே இருந்த ஒரு மோட்டாரில் ஏறிக்கொண்டு போலிஸ் கமிஷனருடைய கச்சேரிக்குப் போய், அவரிடத்தில் இரண்டொரு நிமிஷ நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இங்கே வந்தேன். உங்களுடைய துரதிர்ஷ்டத்துக்கு அனுசரணையாக இன்னோர் இடைஞ்சல் வந்து இன்றைய தினம் குறுக்கிட்டிருக்கிறது; இன்றைய தினம் மைலாப்பூரில் ரிஷபவாகன உற்சவம் ஆதலால், இந்த டவுனில் உள்ள போலீஸ் ஜெவான்கள் எல்லோரும் அங்கே அனுப்பப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/313&oldid=646218" இலிருந்து மீள்விக்கப்பட்டது