பக்கம்:மதன கல்யாணி-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மதன கல்யாணி

அங்கே லக்ஷக்கணக்கில் ஜனங்கள் கூடுவார்கள் ஆகையால், அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பாக அத்தனை ஜெவான்களும் இருக்க வேண்டியது அத்தியாவசியமாக இருக்கிறது. அங்கே அனுப்பப்பட்டிருக்கும் ஜெவான்களை எல்லாம் அவ்விடத்தை விட்டு அழைத்துக் கொண்டு வந்தால் கமிஷனர் முதல் எங்கள் எல்லோருக்கும் உத்தியோகம் போய்விடும். பல இடங்களில் சிதறி நிற்கும் அந்த ஜெவான்களை இப்போது ஒன்று கூட்டுவதும் சாத்தியமில்லாத காரியம். இன்று ஜெவான்கள் எல்லோரும் மைலாப்பூருக்குப் போய்விடுவார்கள் என்ற தைரியத்தினாலேயே அந்த டாம்பாச்சாரி ஜெமீந்தார் இவ்வளவு துணிகரமாக இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. இப்போது எங்களிடத்தில் சுமார் பத்து ஜெவான்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சரியான ஆயுதங்களும் இல்லை. இந்த பங்களாவில் உங்களால் வைக்கப் பட்டுள்ள அறுபது ஆள்கள் அவ்வளவாக உபயோகப்பட மாட்டார்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். நானும் அந்தப் பத்து ஜெவான்களும் இங்கே வந்திருந்து எங்களால் ஆன உதவியைச் செய்யத் தடையில்லை; ஆனால், எதிரி ஆயுதங்க ளோடு இருநூறு மனிதர்களை அழைத்து வந்தால், அவர்களை வெல்ல எங்களால் முடியும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. நாம் எல்லோரும் இங்கேயே இருந்து வருவதை அனுபவிப்பது நல்லதென உங்களுக்குத் தோன்றினால் அப்படியே செய்வோம். அப்படி இல்லாவிட்டால், போலீஸ் கமிஷனர் துரை இன்னோர் உபாயம் சொல்லியிருக்கிறார்; அந்த மாதிரி செய்ய உங்களுக்குப் பிரியமிருந்தால் அதற்குத் தகுந்த ஏற்பாடு செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். போலீஸ் கமிஷனருடைய அந்த பங்களாவில் நான் என்னுடைய கச்சேரியை நடத்திக்கொள்ள அவர் விட்டு வைத்திருக்கிறார். இப்போது எவருக்கும் தெரியாமல் நீங்களும், ஜெமீந்தாரிணி யம்மாளும், அவர்களுடைய இரண்டு பெண்களும் ரகசியமாகப் புறப்பட்டு மோட்டார் வண்டியில் உட்கார்ந்துகொண்டு கமிஷனருடைய கச்சேரிக்குப் போய்விட்டால், அந்தக் கச்சேரியி லாவது, நான் ஆபிஸ் நடத்தும் பக்கத்து பங்களாவிலாவது நீங்கள் மறைந்திருந்து காலையில் இங்கே வந்துவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/314&oldid=646220" இலிருந்து மீள்விக்கப்பட்டது