பக்கம்:மதன கல்யாணி-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மதன கல்யாணி

மைனர்:- எங்களுடைய பெட்டிவண்டி வந்திருந்தது. அது திரும்பிப் போன போதுதான் நான் அதைப் பார்த்தேன்; எங்களுடைய வண்டிக்காரன் ஒட்டிக்கொண்டு போனான். உள்ளே கோமளவல்லியின் முகம் தெரிந்தது. அதற்குள் வேறு சிலரும் இருந்தனர். துரைஸானியும் வந்திருக்கலாம். அம்மாள், இன்றைக்கிருந்த கோபத்தில், வந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் - என்றான்.

இவ்வாறு சம்பாஷித்த வண்ணம் அவ்விரண்டு உல்லாச

புருஷர்களும் சிறிது தூரம் சென்று, ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு இரவு ஒரு மணிக்கு தத்தம் பங்களவை அடைந்தனர்.

துரைராஜா தனது சயனத்திற் படுத்துக்கொண்டான் ஆயினும், அவன் அன்றிரவு முற்றிலும் துக்கம் என்பதே கொள்ளாதவனாய், அன்று நிகழ்ந்த அதியற்புதமான சம்பவத்தைப் பற்றியும், மகாபூடகமாக வந்து மிகவும் எச்சரிப்பாக நடந்து கொண்ட அந்த அதிசுந்தர மங்கை பிரேரித்த விஷயங்களைப் பற்றியும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பொழுதும் புலர்ந்தது. அவன் அந்தப் பெண்மணி அனுப்புவதாகச் சொன்ன கடிதத்தின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்ததன்றி, அந்த வீணை வித்துவானை எப்படியாவது அன்றைக்குள் அடித்து அவனுடைய கைகால்களை எல்லாம் முறித்தெறிந்து விடவேண்டும் என்றும் தீர்மானித்திருந்த சமயத்தில், அவனுடைய வேலைக்காரனான பொன்னம்பலம் விரைவாக ஓடிவந்து யாரோ ஒருவன் கொணர்ந்தான் என்று ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான்.

துரைராஜா சகிக்க ஒண்ணா ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றும், ஒரு சிறிய துண்டுக் காகிதமும் இருந்தன. அவைகளைத் தவிர வேறு கடிதமே காணப்படவில்லை. அந்தத் துண்டுக் காகிதத்தில்,

மதனகோபாலன்,

வீணை வித்துவான். சுந்தர விலாஸ், கோமளேசுவரன்பேட்டை. என்ற சொற்களைத் தவிர வேறு ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/54&oldid=646289" இலிருந்து மீள்விக்கப்பட்டது