பக்கம்:மதன கல்யாணி-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55

அவனவன் அரைவயிறு கால் வயிற்றுக்கு கஞ்சியையோ, கூழையோ குடித்து விட்டு ராப்பகல் உழைப்பாலும் பட்டினி யாலும் சாகிறான். அப்படிச் சேரும் பணங்களை எல்லாம் தண்ணிரைப் போல, நீ ஆயிரக்கணக்கில் வாரி இறைக்கப் பார்க்கிறாய். ஐயாயிரமாம்; இருபதினாயிரமாம்; கோடியாம்; எவ்வளவு தாராளமப்பா இந்தத் தடவை போலீஸ் ஸ்டேஷனில் போயிருந்து அவமானப்பட்டதோடு நல்ல புத்தி வந்துவிடும் என்றல்லவா நாங்கள் நினைத்தோம். அந்தப் பைத்தியம் நன்றாகப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறதே; நம்முடைய கண்மணி யம்மாளின் காலில் ஒட்டிய தூசுக்கும் இணை வருவாளா அந்தக் கூத்தாடிச்சி, அவள் இது வரையில் உன்னைப் போல எத்தனை மனிதர்களை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டவளோ? அப்படிப்பட்ட தேவடியாளுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி, கேவலம் வெட்கித்தலை குனிவதை விட்டு, ஒரு பெரிய மகாராஜாவின் மகளைக் கலியாணம் செய்து கொண்டவனைப் போல மகா அகம்பாவமும் பெருமையும் பாராட்டிக் கொள்வதுமல்லாமல், பெற்ற தாயாரிடத்தில் இதைப் பற்றிக் கொஞ்சமும் லஜ்ஜை இல்லாமல் பேசுவதைப் பார்க்க, என் மனம் பதறுகிறது” என்றாள்.

அதைக் கேட்ட மைனரது முகம் கோபத்தினால் கருத்தது. கை கால்கள் படபடவெனத் துடித்தன. அவன் மிகுந்த அகம்பாவத் தோடு, கல்யாணியம்மாளை முறைப்பாகப் பார்த்து, “இப்போது இவ்வளவு கண்ணிய புத்தியோடு பேசுகிறவர்கள் அந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு, அதை ஒப்புக்கொண்ட காரணமென்ன? எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது எட்டா விட்டால் காலைப் பிடிக்கிறது என்கிற நியாயம் போலிருக்கிறது. ஒகோ! அவள் சுலபத்தில் விட்டுவிடுவாள் என்று எண்ணிக் கொண்டீர்கள் போலிருக்கிறது! நான் மாத்திரம் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருந்தாலாகிலும், நீங்கள் அவளுடைய வாயில் மண்ணைப் போட்டு விடலாம்; இப்போது நீங்கள் இரண்டு பேரும் கையெழுத்துச் செய்து நல்ல வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்க இப்போது யாரிடத்தில் ஆத்திரத்தைக் காட்டுகிறது?” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/59&oldid=646298" இலிருந்து மீள்விக்கப்பட்டது