பக்கம்:மதன கல்யாணி-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83

தள்ளிவிட வேண்டும் என்பது அவனது கருத்து. காலைப் பார்த்துச் சுட்டுவிட்டால், அவன் அதனால் இறந்து போகாமல், இரண்டொரு மாதகாலம் வரையில் வைத்தியசாலையில் படுத்திருக்க நேரும் ஆதலால் அதனால், துரையம்மாளது விருப்பம் பூர்த்தியாகி விடும் என்று துரைராஜா எண்ணி வந்தான். ஆனால், அந்தத் தெருவில் ஜனங்களது நடமாட்டம் மிகுந் திருந்ததைக் காணவே, தான் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள அந்த இடம் சரியானதல்ல என்று உணர்ந்து கொண்டான். என்றாலும் அந்த வீட்டிற்குள் யார் யார் இருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு அதற்கு எதிர்ப்பக்கத்திலுள்ள ஒரு வீட்டில் தான் இருந்து மதனகோபாலன் புறப்பட்டு வெளியில் போகும்போது, தானும் பின்னால் தொடர்ந்து சென்று சமயம் பார்த்துச் சுட்டுவிட வேண்டும் என்றும் துரைராஜா தீர்மானித்துக் கொண்டவனாய், அந்த வீட்டின் எதிர்ப்பக்கத்திலுள்ள வீடுகளை கவனித்துக் கொண்டே இரண்டு முறை தெருக்கோடி வரையில் போய்த் திரும்பி வந்தான். அவனது அதிர்ஷ்டவசத்தினாலோ, அல்லது மதனகோபாலனது துரதிர்ஷ்டவசத்தினாலோ, துரைராஜா உட்கார்ந்து கொள்ள மிகவும் வசதியான ஒரு மெத்தை வீடு காலியாக இருந்தது. அது வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரக் காகிதம் அதன் வாசலில் ஒட்டப்பட்டிருந்தது. அதன் வாசற்கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரரது மேல் விலாசமும் அந்த விளம்பரக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் மைலாப்பூரில் உள்ள ஒரு முதலியார் என்பதைக் கண்டதுரைராஜா தனக்குள் மகிழ்வடைந்து, விரைவாக அந்த வீட்டின் படிகளில் ஏறி, திண்ணையின் மீது உட்கார்ந்து கொண்டான். அந்த திண்ணைக்கு வெளியில் குறட்டின் ஒரத்தில் இரும்புக் கம்பிகளால் கிராதி வைக்கப் பட்டிருந்தமையால், அது துரைராஜாவுக்கு ஒரு வகையான மறைவாக அமைந்ததன்றி, அவ்ன் கம்பிகளின் இடைவெளியில் பார்ப்பதற்கு நல்ல வசதி ஏற்பட்டிருந்தது. அவன் திண்ணையில் உட்கார்ந்த வண்ணம் கம்பிகளின் இடைவெளியின் வாயிலாக, சுந்தர விலாசத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/87&oldid=646354" இலிருந்து மீள்விக்கப்பட்டது