பக்கம்:மதன கல்யாணி-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87

மகாராஜாவின் மகள் என்று ஜனங்கள் கண்டு கொண்டார்கள்” என்றான்.

துரைராஜா, “அப்படியானால், அவளுக்கு ஏராளமான வேலைக் காரர்கள் இருக்க வேண்டும்” என்றான். -

அண்டை வீட்டுக்காரன், “ஆகா! அவர்களில்லாமலா; ஒரு சுமார் ஐந்தாறு வேலைக்காரிகளும் இரண்டு மூன்று வேலைக் காரர்களும் இருக்கிறார்கள்” என்றான்.

துரைராஜா, “சரி, சரி, அதனாலே தான் கதவுகள் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. அதிருக்கட்டும்; அந்த வீணை வித்துவான் காலையிலும் சாயுங்காலத்திலும் வீணை கற்றுக்கொடுக்கப் போக வேண்டாமா?” என்றான்.

அண்டை வீட்டுக்காரன், “ஆம்; அவன் மாத்திரம் காலையிலும், சாயுங்காலத்திலும் போய்விட்டு வருவான். அவனை நான் அடிக்கடி பார்ப்பேன்; ஆனால் இந்த இரண்டு மூன்று நாளாக அவன் என்னுடைய கண்களில் படவில்லை; ஒருவேளை அவனுக்கு உடம்பு அசெளக்கியமாக இருக்கலாம்; இல்லா விட்டால், அவன் ஊரில் இல்லாமலும் இருக்கலாம்” என்றான்.

அந்த விவரங்களைக் கேட்டறிந்து கொண்ட துரைராஜா, அந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேலும் பேசினால், அவன் ஒருகால் சந்தேகங் கொள்வான் என்று நினைத்து, சம்பாஷணையை வேறே விஷயத்தில் மாற்றிவிட நினைத்து அசிரத்தையாக “சரி, உலகம் பலவிதம்; அதிலும் இந்தப் பட்டணத்தில், வேறே எங்கும் காணாத எப்படிப்பட்ட விநோதத்தையும் காணலாம். திருடர்கள், முடுச்சுமாறிகள், மோசக்காரர்கள், விபசாரிகள், வேசைகள் முதலிய சகலமான புண்ணிய மூர்த்திகளுக்கும் இந்த ஊர் இருக்க இடங்கொடுக்கும்; அவர்கள் ஒருவர் இருவராய் இருந்தால், அது ஒர் அதிசயமாக இருக்கும்; இடறி விழுந்தால் அவர்களின் மேலே தான் விழவேண்டும்; அவர்கள் ஒவ்வொரு தெருவிலும் நிறைந்து கிடக்கிறார்கள். அது கிடக்கட்டும்; உம்முடைய பெயரென்ன?” என்றான்.

அண்டை வீட்டுக்காரன்:- என் பெயர் பொன்னுசாமி நாயகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/91&oldid=646362" இலிருந்து மீள்விக்கப்பட்டது