பக்கம்:மதன கல்யாணி-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89

அதிகரித்த பகைமையும் ஆங்காரத்தையும் கொண்டு, அவன் எப்போது வெளியில் வருவான் என்று எதிர்பார்த்துத் துடிதுடித்து நின்று கொண்டிருந்தான். அவ்வாறு பகற்பொழுது கழிய, மாலைப் பொழுதும் வந்தது. மதனகோபாலன் வீட்டிற்குள் இருக்கிறானோ அல்லது வெளியில் போயிருக்கிறானோ என்ற சந்தேகம் அவனை வதைத்துக் கொண்டே இருந்தன. மதன கோபாலன் வீட்டிற்குள் இருந்தாலும், வெளியிலிருந்து திரும்பி வந்தாலும், அதற்கு மேல் இரவில் வெளியில் புறப்படுவானோ என்ற கவலையும், சந்தேகமும் எழுந்து அவனது மனத்தைப் புண்படுத்தின. தெருவில் போவோரும், வருவோரும் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு போனதும், பூட்டப்பட்டிருந்த வீட்டின் வாசலில் நெடுநேரமாக தான் உட்கார்ந்திருந்தது பற்றி பிறர் சந்தேகிப் பார்களோ என்ற நினைவும் அவனை மிகுந்த சஞ்சலத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

அவன் அவ்வாறு தீயின்மேற் புழுவெனத் தவித்திருந்த தருணத்தில், சுந்தர விலாசத்தின் வாசலில் ஒரு சாரட்டு வண்டி வந்து நின்றது. அப்போது மாலை ஆறுமணி சமயம் இருக்கலாம். சூரியன் மேற்றிசையில் மறைந்து போய்விட்டான் ஆனாலும், இருளும் வெளிச்சமுமாக இருந்ததன்றி, முனிசிபல் விளக்குகளும் கொளுத்தப்பட்டுப் போனமையால் வண்டியில் வந்திறங்கியது யார் என்பது நன்றாகத் தெரிந்தது. அதுகாறும் மனத்தளர்வடைந்து தனது பங்களாவிற்குத் திரும்பிப் போய்விடலாமா என்று எண்ணமிட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த துரைராஜாவின் மனதில், அந்த வண்டியைக் காணவே, ஒருவித நம்பிக்கை ஏற்பட்டது. மதனகோபாலன் வெளியில் வந்தாலும், வராவிட்டாலும், அன்று இரவு பத்துமணி வரையில் அங்கே இருந்து பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று அவன் உடனே தீர்மானித்துக் கொண்டவனாய் சாரட்டில் வந்தது யாரென்பதை நன்றாகக் கவனிக்கத் தொடங்கினான். அந்த வண்டி வந்து நின்றவுடனே, பெருத்த தனிகரைப் போல உடைகள் அணிந்திருந்த ஒரு கிழவர் வண்டியில் இருந்து கீழே இறங்கினார். அவரது முகம் முற்றிலும் தாடி மீசைகளால் மூடப்பட்டிருந்தமையால், அவர் யார் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/93&oldid=646366" இலிருந்து மீள்விக்கப்பட்டது