பக்கம்:மதன கல்யாணி-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மதன கல்யாணி விட்டன என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன். என்னுடைய குழந்தைகள் இறந்த தினத்தன்று சிவஞான முதலியார் அந்தக் குழந்தைகளுக்கும் அந்தத் தொற்றுவியாதி வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால், அவர்களை மைசூரிலிருக்கும் தகப்பனாரிடம் அனுப்பிவிட்டதாகச் சொன்னார். அவர்கள் மைசூரில் போய் இறந்துவிட்ட சங்கதி இப்போது தான் தெரிகிறது" என்று சிறிது நிறுத்தி, சிவஞான முதலியாரது முகத்தைச் சந்தேகமாக நோக்கினார். அந்தச் சமயத்தில் சிவஞான முதலியாரது முகத்தில் பிரேதக்களை உண்டானதாக எண்ண வேண்டும். அவரது உச்சி முதல் உள்ளங் கால் வரையில் ஒவ்வோரங்கமும் பெரும் பீதியினால் வெடவெட வென்று நடுங்குகிறது. வாய் குழறுகிறது. கண்கள் திருட்டு விழி விழிக்கின்றன. அப்போது கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் எழுந்து அருணகிரிப் பிள்ளையை நோக்கி, "குழந்தைகள் மைசூருக்கு வர வில்லையே?" என்றார். அதைக் கேட்ட எல்லோரும் திடுக்கிட்டுத் திகைத்து சிவஞான முதலியாரது முகத்தை நோக்க, அவர் அதற்குமேல், தாம் சும்மா இருப்பது தவறென நினைத்து எழுந்து நின்று, "நான் குழந்தைகளை மைசூருக்கு அனுப்பியதாகச் சொல்லவே இல்லை. நம்முடைய நண்பரான அருணகிரிப் பிள்ளை ஞாபகப் பிசகினால் அப்படிச் சொல்லுகிறார்கள். அப்போது இந்த ஊரில் வாந்திபேதி அதிகமாக இருந்தது பற்றி சைதாப்பேட்டையில் உள்ள ஜாகைக்கு அனுப்பி இருந்தேன். அந்த ஊரிலே தான் குழந்தைகள் இறந்து போயின." என்று கூறினார். அதைக் கேட்ட அருணகிரிப் பிள்ளை, "ஒகோ! அப்படியா! இருக்கலாம். நான் மறதியாகச் சொல்லியிருக்கலாம்; எந்த ஊராக இருந்தால் என்ன? குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றார். அதைக் கேட்ட சிவஞான முதலியார் ஒருவாறு மகிழ்ச்சியடையத் தொடங்க, அந்தச் சமயத்தில், அந்தப் பெருத்த கும்பலில் ஒரு மூலையில் மறைவாக உட்கார்ந்திருந்த வேறொரு மனிதர் சடக் கென்று எழுந்து நின்று, "நண்பர்களே! ஒரே ஒரு வார்த்தைக்கு மேல் நான் சொல்லப் போகிறதில்லை; தயவு செய்து உட்கார வேண்டும்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/245&oldid=853388" இலிருந்து மீள்விக்கப்பட்டது