பக்கம்:மதன கல்யாணி-3.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 மதனகல்யாணி 28-வது அதிகாரம் திருட்டுக் கலியாணம், முரட்டு மாமியார் கல்யாணியம்மாளையும் அவளது குமாரத்திகள் இருவரையும் போலீஸ் ஜெவான்களையும் மோட்டார் வண்டியில் வைத்து கொண்டு வாயுவேக மனோவேகமாகப் பறந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குலாம் ராவுத்தர் பின்புறம் திரும்பித் திரும்பிப் பார்த்தவராக அரைக்கால் மயில் தூரம் சென்று அவ்விடத்தில் குறுக்காக வந்த ஒரு பாட்டையின் வழியாக வண்டியைத் தெற்கு முகமாக திருப்பி மிகவும் வேகமாக விடுத்துக் கொண்டு போகிறார். இருள் எங்கும் சூழ்ந்திருக்கிறது. அரைக்கால் மயிலுக்கோரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முனிசிபல் விளக்குகளும் பாதையின் இருபுறங்களிலும் இருந்த மரப் பத்திகளும் அந்த வண்டிக்குப் பயந்து தலைதெறிக்கப் பின்னால் ஒடுகின்றன. எதிர்ப்பக்கத்தில் அப்போதைக்கப்போது வந்த வழிப்போக்கர்கள் எல்லோரும் கதி கலங்கி அங்குமிங்கும் சிதறியோடுகிறார்கள். வண்டியிலிருந்தோர் அனைவரும், அந்த இருளில் வழி தவறிப் போய், வண்டி மரங்களில் மோதிவிடுமோ என்றும், பள்ளம் படுகுழிகளில் வீழ்ந்து கவிழ்ந்து போகுமோ என்றும், மிகவும் அஞ்சி நடுநடுங்கித் தங்களது உயிரைப்பற்றி மிகுந்த கவலைக் கொண்டவராகத் தத்தளிக்கிறார்கள். பங்களாவிற்கு வெளியில் ஒளிந்திருந்து வெளிப்பட்ட திருடர்கள் தங்களது மோட்டார் வண்டியைத் தொடர்ந்து வருகிறார்களோ என்றும், அவர்களால் சிவஞான முதலியாருக்கும், பங்களாவிலிருந்த சிப்பந்திகளுக்கும், மற்ற சொத்துகளுக்கும் எவ்விதக் கெடுதல் சம்பவித்ததோ என்றும் கல்யாணியம்மாள் நினைத்துக் கரைகடந்த கலக்கமும் கிலியும் கொண்டவளாக இருந்தாள். கோமளவல்லியும் தனது தாயைப் போல மிகுந்த சஞ்சலமடைந்து தத்தளித்திருந்தாள் ஆனாலும், துரைஸானியம்மாள் மாத்திரம் எதையும் பொருட்படுத்தாதிருப் பவளாகக் காணப்பட்டாள். அவ்வாறு அரை நாழிகை வழி தூரம் வண்டி சென்றது. அந்த வழியில் வீடுகளே காணப்படவில்லை ஆனாலும், அரைக்கால் மயில் தூரத்திற்கோரிடத்தில் பங்களாக் களும், இடையிடையில் தோப்புகளும், வயல்களும், ஆறும் வந்து