பக்கம்:மதன கல்யாணி-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 அசாத்தியமான காரியம். சகிக்க இயலாத அவமானத்தினால், அந்தச் சீமாட்டியினது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப் போய்விட்டது. முகம் மிகவும் விகாரமடைந்து கீழே கவிழ்ந்தது. அவள் இரண்டொரு நிமிஷ நேரம் திகைத்து திக்பிரமை கொண்டு பேச்சு மூச்சற்றுக் நின்றாள். ஆனால், தான் அவ்வாறு நிற்பது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்று நினைத்தவளாய் அந்த அம்மாள் ஜெமீந்தாரை மிகவும் விசனமாக நோக்கி, "இந்தக் கடிதம் எழுதியனுப்பிய மனதரை என்னவென்று சொல்வது! ஒரு வீட்டில் பெண் இருந்தால், அதை யாராவது ஒருவருக்குத் தான் கட்டிக் கொடுக்க முடியும். பெண் பார்க்க வரும் எல்லோருக்கும் ஒருத்தி எப்படி பெண்டாட்டியாவாள்? யாராவது ஒருவர் தான் சந்தோஷம் அடைவார்கள். மற்ற எல்லோரும் விசனப்படத்தான் நேரும். அதை மனசில் வைத்துக் கொண்டு, இப்படி எல்லாம் அயோக்கிய மான காரியம் செய்தால், அவர்கள் மனித வகுப்பையே சேர்ந்தவர் ஆகமாட்டார்கள். இதை எழுதியது யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதை வெளியிட எனக்கு மனமில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட அயோக்கிய மனிதனும் நம்மைப் போல் ஜெமீந்தார் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறானே என்று நீங்கள் காறித் துப்புவீர்கள். இந்த மனிதனுக்கு நாற்பது வயதாகிறது. இவனைக் கட்டிக் கொள்ள என்னுடைய பெண் சம்மதிக்கா விட்டால், அதற்காக இப்படியெல்லாம் எழுதிக் கலைத்தால், பெண்ணைக் கொண்டு வந்து இவனுடைய காலில் தள்ளுவார்கள் என்று நினைத்தான் போலிருக்கிறது. எங்களுடைய மனசுக்குப் பிடித்த இடம் கிடைக்காவிட்டால், பெண்ணைக் கிணற்றிலாவது குளத்திலாவது தள்ளுவோமேயன்றி இப்பேர்ப்பட்டவனுக்குக் கொடுக்கவே மாட்டோம். இந்தக் கடிதம் முழுதும் கட்டுப்பாடாக எழுதப்பட்ட பொய்க கடிதம். எங்களுடைய குழந்தை சகலமான நற்குணங்களும் நிறைந்த தங்கமான பெண்; நான் கீறின கீற்றைத் தாண்டி நடப்பவளன்று. தங்களுக்கு இஷ்டமானால், என்னோடு வந்து பெண்ணைப் பார்க்கலாம். அவள் காயலாவாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவள் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யக் கூடயவளா என்பது பார்வையிலேயே தெரியும்" என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/71&oldid=853472" இலிருந்து மீள்விக்கப்பட்டது