பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தரை சூழ்ச்சி


ந்தரை சூழ்ச்சிப் படலம் மந்தரையாகிய கூனியின் சூழ்ச்சியோடு ஆரம்பிக்கவில்லை. தசரதன் இராமனுக்கு முடிசூட்டச் சோதிடரிடம் நன்னாள் கேட்கிறான்; வசிட்டனை இராமனுக்கு உபதேசம் செய்ய அனுப்புகிறான் ; ஊரை அலங்காரம் செய்ய ஆணையிடுகிறான். ஊர் அலங்காரம் முடிகின்றது. அப்பொழுதே மந்தரை சூழ்ச்சி செய்ய ஆரம்பம் செய்கிறாள்.

மந்தரை சூழ்ச்சிப் படலம் அவளுடைய சூழ்ச்சியோடு முடியவுமில்லை. கைகேயியின் தூய சிந்தையை அவள் திரித்து விடுகிறாள். கைகேயி, 'சரி, உன் யோசனைப்படியே செய்து முடிப்பேன்’ என்று கூனியிடம் கூறி அனுப்புகிறாள். கூனியும் போய்விடுகிறாள். அதோடு படலம் முடியவில்லை கைகேயி தன் சூழ்வினைக்காகத் தன்னைத் தயாராக்குகிறாள். வார்குழற் கற்றையிற் சொருகிய மாலையைச் சிதைக்கிறாள், மேகலை சிந்துகிறாள், வளை துறக்கிறாள், திலகம் அழிக்கிறாள், பூவுதிர்ந்ததோர் கொம்பெனப் புவிமிசைப் புரள்கிறாள், தசரதன் வருகைக்காகக் காத்திருக்கிறாள். தசரதன் வருகையோடு அடுத்த கைகேயி சூழ் வினைப்படலம் ஆரம்பமாகின்றது.

இனி மந்தரை சூழ்ச்சிக் காட்சியைக் கவனிப்போம். ராமனுடைய பட்டாபிஷேக வைபவத்துக்காக அயோத்தி மாநகர் அலங்கரிக்கப்பட்டுவிட்டது. அலங்காரமாகும் காட்சியின் இறுதியில்,

அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன் நகர் இயல்(பு) எனப் பொலியும்

என்று கூறிப் 'பொன்' திரை விடுகிறார் கவி.