பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xi

 தனி மனிதன் மனம் அடங்கக் கற்க வேண்டும். அதற்கு ஒரே வழி இத்தகைய மந்திரங்களைப் பயன்படுத்துவதே ஆகும். இந்த மந்திரங்கள் மோட்சம் அடைய வழி வகுக்கின்றன என்பதை நம்பாதவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்களும்கூட மன இறுக்கம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இவற்றைப் பயன்படுத்துவது இன்றைய சமுதாயத்தில் அனைவருக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அவசர வாழ்க்கை உடைய இந்நாட்களில் கூட காலை, மாலை இரு வேளைகளிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது ஓரிடத்தில் அமர்ந்து மேலே காட்டிய மந்திரங்களோடு ஓம் நமச்சிவாய, ஒம் நமோ நாராயணாய, ஒம் சரவணபவ, புத்தம் சரணம் கச்சாமி, தன்மம் சரணம் கச்சாமி என்பன போன்ற பல மந்திரங்களில் தங்கள் மனத்தில் எது அமைதியை உண்டாக்குகிறதோ அம் மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினால், வெகு விரைவில் மன இறுக்கம் தளர்வதைக் காணமுடியும். மன இறுக்கம் தளர்ந்தால் இரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை குறையும், இருதயத் துடிப்பில் சமநிலை ஏற்படும்.

மனிதர்களுள் பல மனநிலை உடையவர்கள், பல்வேறு வகைப்பட்ட வளர்ச்சி நிலை பெற்றவர்கள் உண்டு. எனவே ஒருவருக்குப் பொருத்தமான மந்திரம் மற்றவர்க்குப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆகவே தான், நூற்றுக்கணக்கான மந்திரங்களை நம் முன்னோர் நிறுவியுள்ளனர். அவரவர்க்குப் பொருத்தமானதை அவரவர் தேர்ந்து கொள்ளலாம்.