பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xii

 எப்படித் தேர்வு செய்வது என்பது அடுத்து நிற்கும் வினா. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மந்திரத்தையும் மூன்று நாட்கள் வீதம் ஜெபம் செய்து பார்க்கலாம். எந்த ஒன்றைச் செய்யும் போது ஒரு அசாதாரணமான அமைதி ஏற்படுகிறதோ அந்த மந்திரமே (அதிர்வெண்களே (Frequency) அவர் களுக்குப் பொருத்தமானது ஆகும்.

இம் மந்திரங்கள் பற்றிய விரிவான கட்டுரையே மந்திரங்கள் என்றால் என்ன? என்ற தலைப்பில் இந்நூலின் முதலில் இடம் பெற்றுள்ளது. ஏதோவொரு துண்டுதலினால் வாழ்க்கையின் அந்திம காலத்தில் இது பற்றி எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்ட அதன் பயனாக இக்கட்டுரைகள் எழுதப்பெற்று உள்ளன. மந்திரங்கள் என்றால் என்ன? என்பதை ஓரளவு உணர்ந்த பின்பு இம்மந்திரங்களை உண்டாக்கும் சித்தர்கள் பற்றிய கட்டுரை அடுத்துள்ளது.

அடுத்து அமையும் இரு கட்டுரைகளும் கீழை நாடுகள் எத்துனை அளவிற்கு மேலை நாடுகளை விட ஆன்மீகத்தில் மேல் நிலை எய்தி உள்ளன என்று விளக்குவன. விநாயகர் குறித்த கட்டுரை அடுத்து அமைவது.

ஈற்றில் அமைந்தது ஈறிலாச் சிறப்பின் வள்ளலார் குறித்த கட்டுரை - மகாமந்திரம். மந்திரத்தில் தொடங்கி மந்திரத்தில் முடியும் இக் கட்டுரைத் தொகுப்பு நூலைத் தமிழர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உடையேன்.

சென்னை - 83

அ.ச. ஞானசம்பந்தன்

3.6.94