பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 அ.ச. ஞானசம்பந்தன்


கூட எதிரே இருக்கின்றவர்கள் அவற்றைப் புரிந்து கொள்கின்றனரா என்பது ஆராய்ச்சிக்குரியது. பல சமயங்களில் நாம் சொல்லிய கருத்தை எதிரே இருந்து கேட்பவர்கள் புரிந்து கொள்வதாகத் தெரிவதில்லை. இன்னும் சில சமயங்களில் நாமேகூட பேசி முடித்த பிறகு, 'இதை இப்படிச் சொல்லியிருக்கலாமே; அதை அப்படிச் சொல்லியிருக்கலாமே' என்று நினைக்கின்றோம். இதற்குக் காரணம் என்னவென்றால் நாம் பயன் படுத்திய சொற்கள் முழுவதுமாக ஆற்றல் பெற்ற சொற்களாக இல்லாமல் நம்முடைய கருத்தை வெளியிடுகின்ற சக்தி வாய்ந்தவையாக இல்லாமல் குறைமொழியாக இருப்பதுதான். இப்படிக் குறை மொழியாக இருக்கின்ற சொற்களைப் பேசுகின்ற நாம் மந்திரங்களைக் காண்பது இயலாத காரியம்.

ஆயினும் நம்முடைய முன்னோர்கள், பெரியவர்கள், ஞானிகள், தபசிகள், ரிஷிகள் முதலானவர்கள் நிறைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள். தொல்காப்பியனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து மிகச் சிறந்த கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். "நிறைமொழி மாந்தர்” என்று இந்தப் பெரியவர்களுக்குப் பெயர் வைக்கிறார்.

நிறைமொழி மாந்தர்கள் என்றால் என்ன? நாம் பேசுகின்ற குறைமொழிகளையே எடுத்துக் கொண்டு, அந்தக் குறைமொழிகளை நிறை மொழிகளாக மாற்றுகின்ற பேராற்றல் வாய்ந்தவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த ஆற்றல் எங்கே இருக்கிறது? இந்தச் சொற்களிலா? இல்லை.

சாதாரண சொற்களைத்தான் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச்