பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மந்திரங்கள் என்றால் என்ன ? 5

 ஆற்றலை நாம் புரிந்து கொள்வதேயில்லை. ஆகை யினால் தான் அது மறைமொழி. அப்படியானால் மறைமொழி என்றால் அதனைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதியை நாம் பெற வேண்டும். புரிந்து கொள்ளக் கூடிய சக்தியைப் பெற வேண்டும். அப்பொழுது அந்த மந்திரங்கள் பேராற்றலைப் பெற்றவையாக நமக்குத் தெரியும். இப்படிப்பட்ட சொற்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்களைக் காண்கிறார்கள். இப்படிக் கண்ட மந்திரங்களை அவர்கள் சொற்கோவைகளாக, அதிர்வுகளின் கோவைகளாக வெளிப்படுத்தி எங்கே எங்கே எப்போது எப்போது தேவையோ அங்கே அங்கே அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளுமாறு நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுதான். கோயில்கள் அடிப்படையில் பார்ப் போமேயானால் கருங்கல்லினாலே செய்யப் பெற்ற விக்கிரகங்கள் கருவறையில் பதிக்கப் பெறுகின்றன. அவை சாதாரணக் கல்லினாலே செய்யப்பட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே அந்த விக்கிரகங்களைப் பதிப்பதற்கு முன்னால் அவற்றுக்குரிய சக்கரங்கள் எழுதி அவற்றின் அடியிலே வைத்து மேலே விக்கிரகங்களைப் பதித்து விடுகிறார்கள்.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு சக்கரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது செப்புத் தகடுதான். அதில் அந்த அந்த மூர்த்திக்குரிய கோணங்களை எழுதி, கோணங்களுக்குள் அவ்வவற்றுக்குரிய சில எழுத்துகளை எழுதியபின் அவை சக்தி வாய்ந்த சக்கரங்களாக மாறிவிடுகின்றன.