பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 அ.ச. ஞானசம்பந்தன்


இந்தச் சக்கரங்களை அடியில் வைத்து மேலே விக்கிரகங்கள் பதிக்கப்படும்போது அந்த விக்கிரகங்கள் சக்தி பெறுகின்றன. அந்தச் சக்தி முழுமைபெற்று விளங்குவதற்காகத்தான் குடமுழுக்கு - கும்பாபிஷேகம் என்று செய்கிறார்கள். குடமுழுக்கு செய்யும் போது யாகசாலை அமைத்து, அதில் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு கடம் அதாவது குடம் வைத்து பூஜிக்கிறார்கள். கடம் என்பது சாதாரணமாக உலோகத்திலே செய்யப்பட்ட பாத்திரம்தான். அதன் புறத்தே முப்புரி நூலினால் சுற்றி, உள்ளே நீரை நிரப்பி மேலே மாவிலை, தர்ப்பை, தேங்காய் வைத்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து ஜபம் செய்வார்கள்.

குறிப்பிட்ட மூர்த்திக்குரிய மந்திரங்களை, ஆசார்யனாக இருக்கிறவன் எதிரே இருந்து ஐந்து நாள் அல்லது ஏழு நாள் அல்லது மூன்று நாள் என்ற முறையில் குறிப்பிட்ட ஆவர்த்திகள் மந்திர ஜபம் செய்வார்கள். இதனால் கடத்திலுள்ள நீர் சக்தி வாய்ந்த அந்த மூர்த்திக்குரிய எல்லா ஆற்றலையும் பெற்றதாக ஆகிவிடுகிறது. அந்த கடத்திலுள்ள நீரை குடமுழுக்கு அன்று கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்திக்கும், அந்த மூல மூர்த்தி அமர்ந்திருக்கும் கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்வார்கள். அதன்பிறகு அந்த மூர்த்தியை யார் சென்று வணங்கினாலும் தன் அருள் சக்தியை அவர்களுக்கும் வழங்குகின்ற ஆற்றலை அந்த விக்கிரகம் பெற்று விடுகிறது.

இதுபோல இருக்கின்ற ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டுமேயானால் - கார்களிலுள்ள பாட்டரி என்று சொல்கிறார்களே அவற்றை கொஞ்சம் மனத்தில் வாங்கிக் கொண்டு பார்க்க