பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 அ.ச. ஞானசம்பந்தன்


கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஒதநீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே

'ஈசன் எங்கும் இருக்கிறான் என்ற நினைவு வந்தாலொழிய கங்கையிலும், காவேரியிலும் குளித்ததனாலே என்ன பிரயோசனம்? ஒவ்வொரு புண்ணிய தீர்த்தமாகக் குளித்து வருவதனாலே பயன் இல்லை என நாவுக்கரசர் அவருக்கேயுரிய கெளரவமான முறையில் பேசுவார்.

சித்தர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். ஒவ்வொரு குளமாய்ப் போய் காலை, மாலை, நண்பகல் என குளித்தாயே மகனே. என்ன ஆயிற்று? இப்படித் தீர்த்தாடனம் ஆடிவிட்டு வந்ததனாலே ரொம்ப புண்ணியமா? அந்தத் தவளை என்ன ஆயிற்று? அந்தத் தண்ணிரிலேயே இருக்கிறது பார், இருபத்துநாலுமணி நேரமும் இந்தத் தேரை, அவை போயினவா மோட்சத்துக்கு? என்று கேட்கிறார்.

அதனாலே தண்ணிரிலே குளித்தால் மோட்சம் என்றால் தவளையும், மீனும் மோட்சம் போயிருக்கும். இது சித்தருடைய வாதம். ஆக ஒவ்வொரு ஊராகப் போவதனாலேதான் நீ வீடு பேற்றை அடைய முடியுமென்றால் பறவை, விலங்குகள் இரையைத் தேடிப் போகின்றனவே. அவை எல்லாம் மோட்சம் போயிருக்க வேண்டுமே. கோவிலுக்குப் போய்த்தான் கும்பிட வேண்டு மென்றால் அங்கிருக்கிற வெளவால் எல்லாம் மோட்சம் போயிருக்கும்.

ஆக இப்படிச் சொல்வதனாலே ஏதோ இவர்கள் இறை என்பதையோ, இறை பக்தியையோ,