பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 அ.ச. ஞானசம்பந்தன்


'பரம்பொருள் யார் என்று தெரிந்த பின்னாலே, இதெல்லாம் படு பைத்தியக்காரத்தனமாகப்பட்டது. ஏன்?

ஒரே வேதத்திலே பலவிதமான வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சைவர்களுக்கு ஒரு ஆகமம். வைஷ்ணவர்களுக்கு ஒரு ஆகமம். அவர்கள் அதுதான் பரம்பொருள் என்பார்கள். இவர்கள் இதுதான் பரம் பொருள் என்பார்கள். எந்த வழியில் போகிறது? அவரவர்களுடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடி அமைக்கப்பட்டது. மனம் வளரவளர இவை யெல்லாம் புளியம்பழம் போல விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இவன் நாலு வயதிலே பள்ளிக்கூடம் போகும் போது மாம்பழத்திலே சொல்லி கணக்கு கற்றுக் கொண்டான். எம்.ஏ. படிக்கிற காலத்திலும் மாம்பழத்தோடே படித்தான் எனில் இவன் என்ன பண்ண முடியும்?

குழந்தைப் பருவமாக இருக்கும்போது இந்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் வைத்து அவனது மனத்தை ஒருமுகப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தார்கள். இவன் எல்லாம் தாண்டின நிலைமையிலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான் என்றால் - சாகிற வரையில் அனுஷ்டானம் பண்ணிக்கொண்டிருந்தால் என்ன பண்ண முடியும்? அதைத்தான் நினைக்கின்றார், இங்கே சித்தர்.

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள் தேவர் கல்லும் ஆவரோ ? சிரிப்பதன்றி என்செய்வேன்.