பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv

 மக்களை நல்வழிப் படுத்த முயன்ற பெருநாடுதான் நம் இந்திய நாடு. இவர்கள் செய்த உபதேசங்களும் அவற்றை எழுத்து வடிவில் தாங்கிய நூல்களும் நம் நாட்டில் நிறைந்து உள்ளன. கல்வி வேண்டும்; கல்லாதவர் கண்ணிரண்டும் இல்லாதவர் ஆவார் என்ற கருத்துகள் வள்ளுவர் காலம் தொடங்கி இன்று அறிவொளி இயக்கமாகப் பரிமளித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட மக்கள் தொகையில் அதிக சதவிகிதத்தினர் இன்று கல்வி அறிவுடன் விளங்குகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அளவே இல்லை. சந்திர மண்டலத்தில் சென்று இறங்கவும், அணுவைப் பிளந்து அதனுள் அடங்கியிருக்கும் பேராற்றலை வெளிக் கொணரவும் இன்றைய மனிதன் வளர்ச்சியடைந்து இவற்றைச் செய்யும் ஆற்றலையும் பெற்று விட்டான். இவ்வளர்ச்சிகள் அனைத்தும் இவ்வெற்றிகள் அனைத்தும் கல்வியின் துணை கொண்டு புறத்தே நிகழும் செயல்கள் ஆகும்.

இந்த நிலையில் சற்று நின்று நிதானித்துப் பார்க்க சில மணித் துளிகளை எடுத்துக் கொள்வது பொருத்தமுடையதாகும். சிறந்த கல்வியைப் பெற்று சந்திர மண்டலத்தில் இறங்கும் மனிதன், "தான் யார்? இந்த உலகம் எத்தகையது? பஞ்ச பூதங்க்ளின் தன்மை என்ன? தனக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பு யாது? தன்னைப் போன்ற சக மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எத்தகைய உறவு வைத்துக் கொள்ள வேண்டும்" என்பவை பற்றி ஒரு கண நேரம் சிந்தித்தானா என்ற வினாவை எழுப்பினால் விடை கிடைப்பது கடினம். இது ஏன்? இவன் கற்ற கல்வி இவ்வினாக்களுக்கு விடை காண உதவாமல் போனது ஏன்?