பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
у

 வள்ளுவன் குறளை வாரி இறைத்து விட்டோம். பரிதியார், பரிமேலழகரில் தொடங்கி குறளுக்கு உரை வகுத்து விட்டோம். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்கு, 1800 பக்கங்களில் உரை எழுதி வெளியிட்டு விட்டோம். புத்த பகவானுடைய “தம்மபதத்தை உலகெங்கிலும் பரப்பி விட்டோம். இது ஒரு புறம் நிற்க, திருமுறை பாராயணம் செய்து மணிக் கண்க்கில் பூசனை புரிபவர்கள் எத்துணை பேர். ஆறாயிரப்படி, பன்னிராயிரப்படியில் தொடங்கி முப்பத்தாறாயிரப்படி வரை நாலாயிரப் பிரபந்தத் திற்கு விளக்கவுரை கண்டு விட்டோம். அறிவின் வழி உதவி பெற்று குறள், தம்மபதம் என்பவற்றைப் பயின்று பரப்புபவர்களும் பக்திநெறியில் நின்று பூசனை புரிபவர்களும் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கட் சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். தமிழகத்திலுள்ள மக்களை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட இவ் அறிவுவாதிகளும் பக்தர்களும் சமுதாயத்திற்கு என்ன பயனை விளைவித்தார்கள்? விடை கூறுவது கடினம்.

இந்த வினாக்களை எல்லாம் நாம் இன்றுதான் கேட்கின்றோம் என்றில்லை. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வள்ளுவப் பேராசான் கற்றதனால் ஆய பயன் என்? (திருக்குறள் - 2) என்றும் 'ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் பேதை' (திருக்குறள் 834) என்றும் கூறி நொந்து போனார். ஆறாம் நூற்றாண்டில் நாவுக்கரசர் பெருமான் வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்தும் என்? நீதிநூல் பல நித்தம் பயிற்றில் என்? (5-999) என்று வருந்தினார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகப் பெருந்தகை 'கற்றாரை யான் வேண்டேன். கற்பனவும் இனி அமையும் (தி. 555) என்று கூறுகிறார். பதினேழாம்