பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 அ.ச. ஞானசம்பந்தன்


புவியியல் அடிப்படையில் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகள் என்பன இல்லை என்றாலும், மக்களைப் பொறுத்தமட்டில் வேறுபாடு இருக்கத் தான் செய்கிறது. மேற்கிலும், கிழக்கிலும் மட்டுமா வேறுபாடு? நம் நாட்டையே எடுத்துக்கொண்டாலும் தெற்கு, வடக்கு என்ற வேறுபாடு இருக்கிறது. பஞ்சாபியரை வங்காளிகள் ஏற்றுக்கொள்வதில்லை; வங்காளியரைப் பஞ்சாபியர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்று என்னோடு ஒரு வடநாட்டு நண்பர் இரயிலில் பயணம் செய்தார். அவர் குவெட்டாவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் கலவரத்தினால் பம்பாயில் குடியேறி, மோட்டார் உதிரி உறுப்புகள் (spare parts) விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். அவர் தம் இனத்திற்குத் தவிர இந்திய நாட்டில் உள்ள பிற அனைத்து இனத்தவர்க்கும் தேசிய இன இயல்பு என்று சில குணங்களைக் கூறினார்; அவை என்னை வியப்பில் ஆழ்த்தின. இவர்கள் திருடர்கள்; இவர்கள் வஞ்சகர்கள்; இவர்கள் சாமான் இல்லாமலேயே விற்பனை செய்பவர்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அவர் தன் போக்கில் இவ்வாறு இந்திய இனங்களுள் வேறுபாட்டைக் கண்டார்.

பாலஸ்தீன நாட்டில் யூதர்களும், முகமதியர்களும் ஒரே கோவிலில் ஆளுக்கு ஒரு பக்கத்தில் சென்று வழிபாடு செய்யும் நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் அந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் தாழ்ந்தவர் என்றும், அந்தப் பகுதியில் வழிபாடியற்றுபவர் இந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் தாழ்ந்தவர் என்றும் கருதுகின்றனர். ஒரே நாட்டில் இருந்தவர்கள்தாம் என்றாலும் - ஒரே நாட்டில் இன்று வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள்தாம் என்றாலும் - இந்த