பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 அ.ச. ஞானசம்பந்தன்


மனிதனுடைய அறிவின் எல்லையை வளர்த்துக் கொண்டே செல்ல எண்ணுகின்றார்கள்; அறிவை வளர்க்கின்றனர்; பலப் பல புதுப்புதுப் பொருள்கள் தோன்றுகின்றன. அறிவின் பெருக்கம் மட்டும் வளர்ந்து, மனம் வளராத காரணத்தால் அந்த வளர்ச்சி ஹிரோசிமாவில் போய் முடிகிறது. அறிவு வளர்ந்து - வளருவதற்கேற்ப மனமும் வளர்ந் திருக்குமேயானால் அது அணுச் சக்தியை அமைதிப் பணிக்கு ஆளாக்கியிருக்கும். உணர்வைப் பற்றிக் கவலைப்படாமல் அறிவை மட்டும் வளர்த்தமையின் அவர்கள் வாழ்வில் ஒரு பெருஞ்சுமையும் அமைதி யின்மையும் காணப்படுகின்றன, எங்காவது, எப்படி யாவது அமைதியைப் பெற மாட்டோமா என்ற மனநிலை, ஏக்கம் அந் நாட்டில் வளர்ந்துவரக் காண்கின்றோம். எனவேதான், இன்று மகரிஷிகளுக்கு அங்கே நல்ல வரவேற்பு. செல்லும் மகரிஷிகளோ நம் நாட்டவர். மனம் வளரவும் அமைதியடையவும் இயமம், நியமம், தியானம் என்ற வழிகளைக் கூறினார்களே, அந்த உண்மையான மகரிஷிகளை இங்கே குறிப்பிடவில்லை. செல்லும் மகரிஷிகட்கே அது தெரிவதில்லை. என்றாலும், அங்கே சென்று மூக்கைப் பிடித்துப் பத்மாசனம் போட்டுவிட்டால் போதும், ஒரு பெரிய மகரிஷி என்ற பெயரைப் பெற்று விடலாம். அந்த அளவிற்கு அவர்களின் ஏக்கம் வளர்ந்துள்ளது; ஆதலின் இங்கிருந்து செல்பவர்களை உயர்வாக எண்ணிப் போற்றுகின்றனர். எலியைப் பிடித்து, பூட்டிய அறையில் விட்டுவிட்டால் எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் தப்பி ஓட முயலுவதைப் போன்று அவர்களின் வாழ்க்கை __________________________________________________ முதல் அணுகுண்டு போடப்பட்ட இடம்