120
மனத்தின் தோற்றம்
பெரியவர் ஒருவர் ஒரு திருமண அழைப்பிதழில், எனது மகன் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். உரியவர்கள் அழைப்பிதழின் கைப்படியை என்னிடம் காட்டித் திருத்தித் தரச் சொன்னார்கள். நான் எனது மகன்’ என்பதை என் மகன்' என்று திருத்திக் கொடுத்தேன். இதை எப்படியோ பார்த்துவிட்ட பெரியவர், நான் எனது மகன் என்று எழுதியதை என் மகன் என எந்த மடையன் திருத்தினான் என்று சினம் கொண்டாராம்.
எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்கள் என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டிருக்கிறது. மொழி யியலார் சிலரும் மடையர்களாதற்கு அஞ்சிப் போலும் - எனது மகன் என்றே எழுதத் தொடங்கி விட்டனர்.
இப்போது தமிழ் இலக்கணத்திலிருந்து ஆங்கில இலக் கணத்திற்குத் தாவுவோம்: மாணவன் கால் என்பதற்கு Student's leg என ஆறாம் வேற்றுமை உருபாகிய ‘s’ என்பதற்கு முன்னால் ‘ ’ ’ என்னும் எழுத்தெச்சக் குறியை (Apostrophe) இடவேண்டும். இது ஒரு மாணவனின் காலுக்கு உரியது. அதாவது, உடையவர் ஒருமையாயிருந்தால் இது தகும்.
மாணவர்களின் கால்கள் என உடையவர் பலராயிருந் தால் - அதாவது பன்மையாயிருப்பின், Students legs என, 's என்னும் பன்மை விகுதிக்குப் பின்னால் என்னும் குறியைப் போட வேண்டும். ‘s’ பெறாத பன்மையில் Children's legs என ‘s’ என்பதன்முன் (’) போட வேண்டும்.
ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கில இலக்கண விதிப் படியே எழுதுபவர்கள், தமிழில் எழுதும்போது மட்டும், எனது மகன் என விதியை மீறி எழுதலாமா?