உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

135



அகநானூற்றில்:

“மனைய மெளவல் மாச்சினை காட்டி” (23:12)

பெருங் கதையில்:

“இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்” (1:33:73,74)

இப் பகுதிகளால், மனையில் மல்லிகை வளர்ப்பதும் கூந்தலில் சூடிக் கொள்வதும் கற்புடைய மகளிர்க்கு இயல்பு என்பதை அறியலாம்.

இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி என்னும் நூலில், உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக்கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள (கறையாகிய) மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேய வில்லையாம். பாடல்:

“நுதிக்கோடு கூர்ங்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழும்தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான்மறியே” (75)

என்பது பாடல். கூர்ங்கலை உகைப்பாள் = உமாதேவி. மேலும் சில வருமாறு:-

‘முல்லை சான்ற கற்பு’ என்னும் தொடர் அகநானூறு (274), நற்றிணை (142), சிறுபாணாற்றுப்படை (30) என்னும் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஐங்குறு நூறு

“வாணுதல் அரிவை முல்லை மலைய” (408)

தக்கயாகப் பரணி

“முடிச்சூட்டு முல்லையோ முதல்கற்பு முல்லையோ” (119)