சுந்தர சண்முகனார்
149
திங்களும் திருமகளும் கடலில் தோன்றியதாகக் கூறுவது புராண இலக்கிய மரபு. இதே சிவப்பிரகாச அடிகளார் தம் நன்னெறி என்னும் நூலில், தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல், (18) என்றார். தண்ணென் கதிர் திங்கள். முழு நிலாப் பருவ நாளில் கடல் மிகவும் அலைமோதி மோதி அலறும் - இரைச்சலிடும். அதை இப்பாடலின் முதலடியில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்தலையை மோதி என்னும் தொடரில், தாயாகிய கடல், நிலவால், தலையை மோதி மோதி வருந்துகிறது என்னும் பொருள் நிழலோடுகிறது. இதையே மிகுந்து அலை மோதி எனப் பிரிக்கின், அலை மிகுதியாய் அடிக்கிறது என்னும் பொருள் தெரிகிறது. இவ்வாறு இருபொருள் (சிலேடை) அமையப் பாடப்பட்டுள்ளது ஒரு சுவையன்றோ?
அடுத்தது, உடன் பிறந்தவளின் மனையை மூடி அழிப்பது. உடன் பிறந்தாள் திருமகள். திருமகள் தங்கியிருக்கும் மனை (வீடு) செந்தாமரை, நிலா தோன்றியதும் தாமரை மலர் முடிக்கொள்ளும் அல்லவா? அதைத்தான், இவ்வாறு உடன் பிறந்தவளின் மனையைக் கெடுப்பதாகக் கூறியுள்ளார்.
பிரிந்த தலைவி திங்களை வெறுத்துப் பேசுவதாகக் கூறுவது இலக்கிய மரபல்லவா? எனவே, தாய்க்கும் தமக்கைக்கும் தொல்லை கொடுக்கும் திங்கள், ஓர் உறவும் இல்லாத எனக்குத் தரும் தொல்லையைச் சொல்லவா வேண்டும் என்று கூறும் முறையில் மாயையின் வாயிலாக அடிகள் பாடியுள்ளார்.
திங்கள் தேய்வதும் வளர்வதுமாய் இருப்பதைக் குறிப்பிட்டு, நிலையில்லாமல் தேய்கின்ற நிலவே எனக் கூறித் திட்டுகிறாள் மாயை.