பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

155



7.1 தொழு தெழுதல்

மாதாம்பிகை என்னும் பெண்மணி கொழுநனைத் தொழுது எழுவாளாம்: 'பைந்தொடி கொழுநன் தொழு தெழு தொழிலாள்". (9-21)

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (55)

என்னும் குறள் கருத்து இதில் உள்ளது.

7.2 உடுக்கை யிழந்தவன் கை

அல்லம தேவர், உடையிழந்தவன் கைபோல, அடியர் களின் துன்பம் துடைப்பாராம்:

“உடையிழந்த ஒருவன் கரமெனக்
கடிதடைந்து களைந்தருள் செய்யுநாள்” (13.2)

என்னும் பாடல் பகுதியில்,

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (788)

என்னும் குறள் கருத்து அடங்கியுள்ளது. இவ்வாறு பல உள.

8. உவமையணி

இந்நூலில் உவமையணி மலிந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணி முதலியவும் உள்ளன. ஈண்டு உவமையணி சில காண்பாம்:-

8.1 தளர்ந்துழி உதவும் கல்வி

முனிவர்கள் தளர்ச்சியுற்றிருந்த போது அவர்களின் தளர்ச்சியைப் போக்கத் துருவாசமுனி வந்தாராம். இதற்கு உவமையாக,

“தளர்ந்துழி உதவும் கல்விதானென” (3-34)

என்பது கூறப்பட்டுள்ளது. சிறந்த உவமை இது.