உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மனத்தின் தோற்றம்



வருவோம். ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய

“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே” (235:1-3)

என்னும் புற நானுற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ளும் அரண்மனையில் ஆக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் வெறுப்புக்கும் ஒறுப்புக்கும் உரிய கள்ளச் சாராயம் காய்ச்சுவது போன்றது அன்று வீட்டில் காய்ச்சும் தோப்பி, இந்தக் காலத்தில் தேநீர், காபி வந்து விட்டதால், வீட்டிலோ - நாட்டிலோ மக்கள் மது காய்ச்சாமல் இருப்பார்களாக.

புனிறு தீர் கயக்கம்

பிள்ளை பெற்ற பெண்கட்குத் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் ஒரு பழக்கவினை (சடங்கு) நடத்தல் உண்டு. அதுவரையும் பிள்ளை ஈன்ற பெண் கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு இருப்பதும் நடப்பதும் வழக்கம். வேப்பிலைக்கும் ஐயவிக்கும் (வெண்சிறு கடுகுக்கும்) கடிப் பகை என்னும் பெயர் உண்டு. கடி = பேய், கடிப்பகை = பேய்ப்பகை. புனிறு என்பது, அண்மையில் பிள்ளை ஈன்ற நிலை என்னும் பொருளது. தீட்டுக் கழித்ததும் புனிறு என்னும் நிலை கழிந்து விடுகிறது. கயக்கம் = கலக்கமான நிலை. புதுவை-கடலூர்ப் பகுதியில் சில பல குடும்பங்களில்குறிப்பாக எங்கள் (சு. ச) குடும்பங்களில் பிள்ளை பெற்ற ஒன்பதாம் நாள் தீட்டுக் கழிப்பதும், பெற்ற தாயைக் குளிக்க வைப்பதும் வழக்கம். இந்தக் காலத்தில் இந்த நாள் கணக்கில் குடும்பத்துக்குக் குடும்பம் மாறுதலும் உண்டு. இது மணிமேகலை நூலில் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது: