2. உயிரினும் உயர்ந்தது
ஒழுக்கமே மிகவும் உயர்வைத் தரவல்லது; ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக ஒம்பிக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஈண்டு மற்றையவற்றினும் ஒம்ப வேண்டும் என்னாது, உயிரினும் ஒம்பவேண்டும் என்று உயிரைக் குறிப்பிட்டுள்ளதில் உள்ள நயத்தை ஊன்றி நோக்க வேண்டும். மக்கள் எல்லோருமே தத்தம் உடைமைகளைப் பாதுகாப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பதைக் காண்கின்றோம். அவற்றுள்ளும், இழந்து விட்டாலும் மீண்டும் எளிதில் கிடைக்கக்கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பை (கவனத்தை) விட, இழந்தால் எளிதில் கிடைக்காமல் - அரிதிற் கிடைக்கக்கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பு மிகப் பெரிதாகும். தெளிவாகச் சொல்வோமானால், பொருளின் விலையும் அதைப் பெறும் முயற்சியும் குறையக் குறைய மக்களின் விழிப்பும் குறைந்துகொண்டே போகும்; விலையும் பெறும் முயற்சியும் பெருகப் பெருக மக்களின் விழிப்பும் பெருகிக்கொண்டே செல்லும். எடுத்துக்காட்டாக: மண்பாண்டம், பித்தளைப்பாண்டம், செப்புப்பாண்டம், வெள்ளிப்பாண்டம், பொன்பாண்டம், வைர அணிகள் - இவை முறையே ஒன்றிற்கொன்று பெருமதிப்புடையன வாதலின் இவற்றைப் போற்றிக் காப்பதில் விழிப்பும் பெருகிக் கொண்டே செல்கின்றதல்லவா? இது முதலாவது.
இரண்டாவதாக, நம் உடலைவிட்டுப் பிரிக்கக் கூடிய - மேற்கூறிய - இன்னும் ஏனைய உடைமைகளை விட, நம்