பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மனத்தின் தோற்றம்



கூட, தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிடக் குடும்ப மொழிகட்கும், ஆசிய நாடுகளில் பேசப்படும் சித்தியக் குடும்ப மொழிகட்கும் இடையே ஒற்றுமையிருப்பதாக ஆய்ந்து தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளை ஆராய்ந்த கிரையர்சன் (Dr. Grierson) போன்றோர் சிலர் திராவிடக் குடும்ப மொழிகளை வேறு உலகக் குடும்ப மொழிகளோடு ஒத்திட்டுக் கூறத் துணியாவிடினும், இலங்கைப் பேரறிஞரான ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, O. M, I.), ஆக்சுபோர்டு பல்கலைக்கழப் பேராசிரியர் டி. பர்ரோ (T. Burrow), கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். பி. ஏமெனோ (M. B. Emeneau) போன்றோர் சிலர் திராவிட மொழிகளை உலக மொழிகளோடு பிணைத்துப் பேசியுள்ளனர்.

ஞானப்பிரகாச அடிகளார் 1938-ஆம் ஆண்டளவில், ‘சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological And Comparative Lexicon of the Tamil Language) என்னும் அகராதியொன்று படைத்தார். இதில், சொற்பிறப்பும் மொழி ஒப்பியலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறப்பட்டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக் கொண்ட ஒரு சொல், எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப்பட்டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல் மற்ற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய - ஒத்த நிலையில் வழங்கப்படுகிற அவ்வம் மொழியுருவங்களும் (Indexes of Words Quoted from Indo-European Languages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டுமன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிக்கிறது. ஞானப்பிரகாச அடிகளார், நூலின் முன்னுரையில் பின்வருங் கருத்துக் களைத் துணிந்து வெளியிட்டுள்ளார்: