பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மனத்தின் தோற்றம்



உடலைவிட்டுப் பிரிக்கமுடியாத கை, கால், கண் முதலிய உறுப்புகளைக் காப்பதில், மேலும் மிகமிகப் பெரிய விழிப்பு செலுத்துகிறோம். (இவ்வுறுப்புகள் பிரிக்க முடியாதவை யென்றால் வெட்டியெடுக்க முடியாதவை என்பது பொருளன்று; ஆடையணிகலன்களைப் போல் உடம்போடு கூட்டவும், பின்பு பிரிக்கவும் - பின்பு கூட்டவும் முடியாதவை என்பதே பொருள்.) ஏனைய உடைமைகளை இழந்து விட்டால், அரிய விலை தந்து - அரும்பாடுபட்டாவது திரும்பப் பெற்றாலும் பெறலாம். ஆனால் உடலுறுப்புகளை யிழந்து அவற்றைத் திரும்பப் பெற முடியாதன்றோ? அதனாலேயே உறுப்புகளை ஏனைய உடைமைகளினும் மிகுதியாகப் போற்றுகிறோம்.

மூன்றாவதாக, - ஒர் ஊரில் எதிரி திடீரென்று படையெடுத்துப் போர்புரியும்போது, மறவர்கள் (வீரர்கள்) தவிர மற்றையோர் ஊரைவிட்டு ஒடுகின்றனர், ஒடும்போது தம் உடைமைகளையெல்லாம் அறவேவிட்டு ஒடுகின்றனர். ஒடும் வழியில் ஒரு படைபட்டுக் கை வெட்டுண்டு விழுந்தாலும் அதைப்போட்டு விட்டு ஒடுகின்றனர். கால் வெட்டுண்டாலும், முடிந்தவரை தரையில் ஊர்ந்து ஊர்ந்து நகர முயல்கின்றனர். இங்ஙனம் தம் உடைமைகள், உடலுறுப்புகள் இவற்றையெல்லாம் மனமார விட்டுவிட்டு வெளியில் ஒடுகின்றார்களே! - எதைக் காப்பதற்காக இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒடுகின்றார்கள்? தம் உயிரைக் காப்பதற்காக வன்றோ?

உடைமைகள் போனால் வேறு உடைமைகள் தேடிக் கொள்ளலாம். கை கால்கள் போனால் பொய்க் கை - பொய்க் கால் வைத்துக்கொண்டு வழக்கம்போல் எதையும் செய்யலாம். கண் போனாலும் வேறு கண் வைக்கப் பெற்றுத் திரும்பப் பார்வையைப் பெறலாம். இவற்றை யெல்லாம் இக்கால விஞ்ஞானிகள் செய்து முடிக்கின்றார்கள்