உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

203



குளிர்ச்சியைத் துய்க்கத் துடிக்கிறான். அந்நேரம் அவள் நாணத்தால் தலைவன் பக்கம் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள். அப்போது அவன் அவளை நோக்கி, குரும்பை போன்ற முலைகளின் தண்மையைத் துய்க்க விரும்பும் எனக்கு முதுகைக் காட்டலாமா? என்று கூறுகிறான். இது, நூல் பெயர் தெரியாத பின்வரும் பாடல் பகுதி ஒன்றினால் அறியப்படுகிறது:-

“இளங்குரும்பைத் தண்ணீர் அளவுக்கு
வெந்நீர் அளித்தல் தகுதியன்றோ”

என்று கூறுகிறான். குரும்பை என்பது குரும்பை போன்ற முலை. தண்ணீர் (தண்நீர்) என்பது குளிர்ந்த தன்மை, வெந்நீர் என்பதை வெந்+நீர் எனப் பிரிக்கவேண்டும். வெந்=முதுகை, நீர்=நீங்கள், அளித்தல்= காட்டுத்ல் முறையன்று என்று கூறுகிறான். இங்கே தண்ணீர் (குளிர்ந்த பச்சைத் தண்ணீர்) விரும்பியவர்க்கு, வெந்நீர் (சூடான் நீர்) அளித்தல் தகுதியன்று என்று இரு பொருள் (சிலேடை) தந்து இப்பகுதி சுவை பயக்கிறது. இவ்வாறு சுவைதரும் சொற்கள் பல உண்டு. மேலும் ஒன்று வருமாறு:

தனம்-மாடு

தனம் என்னும் சமசுகிருதச் சொல்லைக் கன்னட மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. கன்னடத்தில் இந்தச் சொல் மாடு (பசு) என்னும் இரு பொருளையும் தருகிறது. இதில் சுவையான செய்தி ஒன்று அடங்கியுள்ளது. தமிழிலும் இது போன்ற அமைப்பு உண்டு. தமிழில் மாடு என்பதற்குப் பசு, செல்வம் என்னும் இரு பொருளும் உண்டு. மாடு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உள்ளமையை,

“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு -
மாடு அல்ல மற்றை யவை”