16. கம்பரின் காலம்
கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் என ஒரு சாராரும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இவற்றுள், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்தே சரியானது. இதற்கு உரிய சான்றுகள் வருமாறு:
கம்பர் சோழ நாட்டினர்; சோழ மன்னரின் அவைக்களப் புலமைத் தொடர்பு உடையவர்; சோழ மன்னர் மூவரின் அவைக்களப் புலவராயும் ஆசானுமாயும் இருந்த பெரும் புலவர் ஒட்டக் கூத்தரோடு முரண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தவர்; தம் மகன் அம்பிகாபதியைச் சோழன் கொன்றதாலும் பிற காரணங்களாலும் சோழ மன்னனைப் பகைத்துக்கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறியவர்.
மேற்கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காணுங்கால், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்து வலுப்பெறும். ஆனால், சிலர், கம்பரும் ஒட்டக் கூத்தரும் ஒரு காலத்தவரல்லர் - அம்பிகாபதி கம்பர் மகன் அல்லன்-என்றெல்லாம் கூறுவர். இது சரியன்று. கம்பரையும் கூத்தரையும் தொடர்புறுத்தியும் கம்பரொடு அம்பிகாபதியைத் தொடர்புறுத்தியும் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. “அள்ளாமல் குறையாது இல்லாமல் பிறக்காது” என்னும் முதுமொழி நூற்றுக்கு நூறு உண்மை யில்லாவிடினும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.