22
மனத்தின் தோற்றம்
கருதியே தொழிலுக்கேற்ற பெயர்கள் தரப்பட்டன. எடுத்துக் காட்டாக, - கணக்கு வேலை செய்பவரைக் கணக்குப் பிள்ளை யென்றும், பாடம் கற்பிப்பவரை ஆசிரியர் என்றும், ஊர் நாட்டாண்மை செய்பவரை நாட்டாண்மைக் காரர் என்றும், சமையல் செய்பவரைச் சமையல்காரர் என்றும் இப்பொழுதும் நாம் அழைக்கின்றோம் அல்லவா? இதே போலத்தான் பண்டைக் காலத்தில் யார் யார் எவ்வெத் தொழில் செய்தனரோ, அவ்வத்தொழிலால் அவ்வவரைப் பெயரிட்டு அழைத்தனர். செந்தண்மையாகிய அந்தண்மை பூண்டு ஒழுகுபவன் (பார்ப்பான்) அந்தணன், பறையடிப்பவன் பறையன் என இங்கனம் அழைத்து வந்தார்கள். எனவே, ஒழுக்கம் குறித்து சாதிப் பிரிவினை ஏற்படவில்லை; தொழில் குறித்தே ஏற்பட்டது என்னும் கருத்தினை, நம் திருவள்ளுவர்,
- “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
- செய்தொழில் வேற்றுமை யான்”
என வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டார்.
உண்மை இங்கனமிருக்க, “ஒழுக்கமுடைமை குடிமை” என்னும் இக்குறளுக்கு 'ஒழுக்கமுடைமை உயர் சாதித் தன்மை ஒழுக்கமின்மை இழி சாதித் தன்மை’ என்னும் கருத்தில் உரையாசிரியர்கள் பலரும் உரை பகர்ந்திருப்பதும், பரிமேலழகர் இக்குறளில் வருணத்தை இழுத்து மாட்டியிருப் பதும் அறியாமையும் வருந்தத்தக்கதுமாகும். “ஏன்? இவ்வுரையாசிரியர்கள் மேல் என்ன தவறு?‘ஒழுக்கமுடைமை குடிமை-இழுக்கம் இழிந்த பிறப்பு’ என்று வள்ளுவர்தான் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றாரே - அதைத்தான் இவர்களும் எழுதினார்கள். இது சரியில்லையென்றால் எது சரி?” என்று நம்மைச் சிலர் வினவலாம். ஆதலின் இக்குறளின் உண்மைக் கருத்தைத் தெளிவுறுத்துவோம்:—