34
மனத்தின் தோற்றம்
சிரித்தாலும் சிரிக்குமாம் - அல்லது கவலையால் கண்ணிர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல் இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது. கண்ணிர் = கள் நீர் = தேன்.
சூரியகாந்திப் பூவுக்கும், தாமரை மலருக்கும் கதிரவ னைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,
- “சகட சக்கரத் தாமரை நாயகன்”
என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கை யுலாவில்,
- “செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு
- நந்தா மதிற் கொடிகள் நட்பாட”
என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, ‘தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்’ என்னும் பெயர்கள் உள வாதலும் அறியப்பெறும். நாயகன் - நாதன் என்றால் கணவன்தானே!
நம் புலவர்கள் திங்களை மட்டும் விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,
- "ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு
- அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே!”
என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,
- “காமக் கருத்தாக் குமுத நாதன்
- கங்குல் வரக் கண்டும்”
என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம் - ஆம்பலின் கணவனாம்!
ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளி