பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

35



யாலும் நிலவொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! கதிரவனும் மதியமும் புறப்படும் நேரத்தில் வழக்கமாக மலர்கள் மலர்வதால் அவற்றை அம் மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபேயாகும். காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே, கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாள ராக - ஆதரவாளராக - நண்பராக வேண்டுமானால் ஒரு வகையில் கூறலாம். இத்னை நன்கு உணர்ந்ததனால் தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் குமுத சகாயன் என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் குமுத நண்பன்' என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனரோ என்னவோ? சகாயன், நண்பன் என்னும் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா?

ஆனால் ஒரு சிலர், மலர்களின் கணவராக வண்டுகளைக் கூறுவது வழக்கம். இதனை,

“காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரன் எனும் ஒருவண்டு உணிஇய”

என்னும் மணிமேகலை யடிகளாலு முணரலாம். அதாவது, மாதவியின் மகளாகிய மணிமேகலை என்னும் மலரை, இளவரசன் உதயகுமரன் என்னும் வண்டு உண்ண விரும்புவதைப்பற்றிக் கூறுகிறது இப்பகுதி. இதிலிருந்து, மலரைப் பெண்ணாகவும் வண்டை ஆணாகவும் கூறும் ஒருவகை மரபு உண்டு என்பது புலனாகும். இத்தகைய இலக்கிய வழக்காற்றைச் சங்க நூல்களிலும் காணலாம். அப்படியெனில், வண்டுகள் மலர்களின் கணவராக முடியுமா? முடியாது. உண்மையை ஆராயின், காய் காய்க்கும் மலர்களுக்கும் அவற்றின் கணவன்மார்களுக்கும் இடையே தூது செல்லும் தூதுவர்களே வண்டுகள் என்பது புரியும், இந்த வேலை செய்வதற்காக வண்டுகள் பெறும் கூலி -