உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மனத்தின் தோற்றம்



படாமல் போனாலும் போகுமாதலின், தாழை போன்ற வற்றில் மகரந்தப் பொடிகள் மிகுதியாகவும், காற்றில் மிதப்பதற்கேற்றவாறு கனமற்று மெல்லியனவாகவுமுள்ளன. இவையும் பிற பூக்களிலிருந்து பிறமகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியில்லாது போவதனாலேயே, வேண்டா வெறுப்பாய்த் தம் பூவிலிருந்தே தன் மகரந்தச் சேர்க்கை பெற்றுக்கொள்கின்றன.

மலர்கள் தன் மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல் இருப்பதற்கு இயற்கையும் ஒத்துழைப்பதும் உண்டு. அதாவது, சில இணையினப் பூஞ்செடிகளில், ஒரே மலரிலுள்ள ஆண் பாகமும் பெண் பாகமும் ஒரே நேரத்தில் முற்றுதல் (பக்குவம்) பெறாமல், முன்பின்னாகவே பதப்படுகின்றன. இதனால் தன்மகரந்தச் சேர்க்கைக்கு வழியில்லாமல், பிற பூக்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. சிறு குழந்தையும் பெரியவரும் மணந்துகொள்ள முடியாததுதானே! பேரா முட்டி, கம்பு, சோளம் முதலியன இந்த வகையைச் சேர்ந்தவை.

எனவே, மலர்கள் பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிறமகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மணமும், நிறமும், தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மணமும் நிறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியன வற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கேயாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலியன ஒரு மலரில் தேன் குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குகளைத் தம்மேல் ஒட்டிக்கொண்டு, வேறொரு