உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. கம்பரின் தமிழ்ப் படலம்



கம்பர் தமது இராமாயணக் காப்பியத்தில் தமிழ்ப் படலம் ஒன்று தந்துள்ளார். அதன் விவரமாவது:—

இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் காட்டில் தம்மை வரவேற்ற சுதீக்கணன் என்பவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டபின், அகத்தியனது இருப்பிடம் நோக்கிச் சென்று நெருங்கினர்.

இவர்களின் வருகையை அறிந்த அகத்தியனின் மகிழ்ச்சி அளவு கடந்ததாய் ஏழுலகும் பரவிற்றாம். என்றும் உள. தென்தமிழ் இயம்பி இசை கொண்டவனும், நீண்ட தமிழால் உலகை அளந்தவனுமாகிய அகத்தியனின் திருவடிகளை இராமன் வணங்க அவன் வரவேற்றான். பாடல் (அகத்தியப் படலம்)

“ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலைதுணை ஏழுலகும் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் ...
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” (36)

ஆண் தகையர் = மற ஆண்மையுடைய இ ரா ம இலக்குமணர். அவர்கள் வந்தனர் எனில் சீதையும் உடன் வந்தமை சொல்லாமலே விளங்கும்.

இராமன் அகத்தியனிடம் படைக்கலம் பெற்று அரக்கரை வெல்லப் போகிறானாதலின் உவகை ஏழுலகும் பரவியது.