பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

‘மனத்தின் தோற்றம்’ என்னும் இந்த நூல் பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது.

சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது.

இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும்.

கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும்.

இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கட்டுரைகள் உருப்பெறப் பல மேற்கோள் நூல்கள் துணைபுரிந்துள்ளன. இந்நூல்களால், பழந்தமிழ் அறிஞர்கள் பல துறைகளில் பெற்றுள்ள அறிவுவளம் அறியவரும்.

எனது நூலையும் வரவேற்று வாழ்த்து நல்க வேண்டு கிறேன். நூலை நன்முறையில் அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன்.

வணக்கம்.
அன்பன்
சுந்தர சண்முகன்