உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மனத்தின் தோற்றம்



திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லை யெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ண வேண்டிவரும். இதைத் தெளியவைக்குமுகத்தான், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற கரையேற விட்ட நகர்ப் புராணம் என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம் என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசை மாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கையில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், கெடிலம் பெருவெள்ளத்தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் -- புராண ஆசிரியர், மாணிக்கவாசகருக்காக மாறியதாகச் செயற்கை யாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளார்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர்.