உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மனத்தின் தோற்றம்



தேவர் என்னும் பெயர் அமைப்பையும், அவர் சமணத்தி லிருந்து சைவத்திற்கு மாறினதையும் எண்ணிப் பார்க்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம் எனச் சூழ்நிலையையொட்டித் தெரிய வருகிலது.

ஈண்டு மீண்டும் ஒன்றை நினைவுகூர வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர்கள், ‘தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் கலம்பகம் பாடியபின் நாங்கள் பாடுவது எடுபடாது’ என்று கூறியிருப்பதைக்கொண்டு, தேவர் இரட்டையர்க்குச் சிறிது காலந்தான் முற்பட்டவர் என்று கொள்ளக்கூடாது. [1]‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்ற புகழ் மொழிப்படி, கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் வல்ல வர்கள். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய சிறந்த நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, கலம்பக வல்லுநர்களாகிய அவர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, தங்கள் ஊர்க்கும் ஒரு கலம்பகம் பாடும்படி அவ்வூரார் கேட்டனர். ஆனால், தொல்காப்பியத் தேவரின் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகமோ முன்னமேயே மிகவும் பெயர் பெற்று விளங்கியது. இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் தாங்களும் ஒரு கலம்பகம் பாடத் தேவையில்லை என இரட்டையர்கள் உணர்ந்து, தேவரின் கலம்பகமே போதும் எனக் கூறிவிட்டனர். எனவே, கலம்பகச் சேம்பியன்கள்’ (Champians) ஆன இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்ற திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இரட்டையர்கட்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களால் பாராட்டப் பெற்று வந்திருக்க வேண்டும் என உணரலாம். ஆகவே,


  1. தனிப்பாடல்.