பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சிங்கமும் புலியும் ஆற்றல் மிக்க விலங்குகள். அவற்றைக் காடுகளிலும் மலைகளிலும் கண்ட மனிதன், எப்படியோ பிடித்து விடுகிறான். உறுதியான கூடு ஒன்று கட்டி, இரும்புக் கம்பிகளை ஒருபுறமோ இருபுறமோ அமைத்து. அதனுள் அந்த விலங்குளை விட்டு, வேளைக்குத் தீனியும் கொடுத்து வருவார் போவார் காணும் காட்சிப் பொருள்களாக அவற்றை ஆக்குகின்றான். காணுதற்கு இயலாத வகையில், பிறர் கண்ணில் படாமல் பதுங்கிக் குகைகளிலும் புதர்களிலும் வாழ்ந்த விலங்குகள். அச்சமற்றுக் காணும் காட்சிப் பொருள்கள் ஆகின்றன. அஞ்சத்தக்க கண்களும் பற்களும், கால்களும் நகங்களும் அவற்றிற்கு உள்ளன. கேட்போர் நெஞ்சில் அதிர்ச்சியை உண்டாக்கும் குரலும் உள்ளது. ஆனாலும், மனிதன் அவற்றை அச்சமற்றுக் காணும் வாய்ப்பை ஏற்படுத்துகிறான். குழந்தைகள் கூட அவற்றை நெருங்கி வந்து காண்கின்றன. கூரைமேல் காணும் குரங்கின் எதிரே நிற்க அஞ்சுகின்ற மகளிரும் இந்தப் புலி, சிங்கங்களை அஞ்சாமல் நெருங்கி வந்து காண்கின்றனர். ஆனால், இந்தப் புலியும் சிங்கமும் தம் ஆற்றலையும் கொடுமையையும் இழந்து தீங்கு செய்யாத காட்சிப் பொருள்களாக மாறி விட்டனவா? - இல்லை. குகைகளையும் புதர்களையும் மறந்துவிட்டனவா? - இல்லை. ஒவ்வொரு நொடிப் பொழுதும் கூட்டை விட்டு வெளியேறி ஓடுவதற்கு வழி உண்டா என்று அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன. கம்பிகளின் பக்கமாக இங்கும் அங்கும் திரிகின்றன. இந்த முனை வரையில் நடந்து வந்து வழி இல்லை என்று கண்டதும், அந்த முனைக்குச் செல்கின்றன. அங்கும் இடம் இல்லை என்று கண்டதும் இந்த முனைக்குத் திரும்பி வருகின்றன. மறுபடியும் அங்கு செல்கின்றன; மீண்டும் இங்கு வருகின்றன. நாலைந்து முறை இவ்வாறு கண்ட பிறகு, ஏன் இந்த வீண் முயற்சி என்று அவை சோர்ந்து கைவிடுவதில்லை. நாழிகைதோறும், நாள்தோறும் இந்த முயற்சியை - வெளியேறி ஓடிப்போகும் இந்த வீண் முயற்சியைச் செய்தபடியே இருக்கின்றன. மனிதன் பொல்லாதவன், உறுதியான கம்பிகளை இட்டு வழியடைத்திருக்கிறான், இனித் தப்பி ஒட வழியில்லை என்று அமைதியடைவதில்லை. திரிந்து திரிந்து, கால்கள் நொந்து நொந்து சலித்த பிறகுதான் அவை அந்தக் கூட்டினுள் அடங்கிப் படுக்கின்றன. சிறிது இளைப்பாறியதும் மீண்டும் எழுந்து அதே முயற்சியை விடாமல் செய்கின்றன. அவற்றைப் பார்க்கச்